வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:11 (02/11/2018)

30 ஆம்புலன்ஸ்களின் உதவியோடு அழைத்து வரப்பட்ட குழந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது?

நுரையீரல் சிகிச்சைக்காக, 30  ஆம்புலன்ஸ்களின் உதவியோடு, திருச்சியிலிருந்து சென்னைக்கு நான்கு மணி நேரத்தில் அழைத்துவரப்பட்ட குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் அரசர் தெரிவித்தார்.

குழந்தை அழைத்து வரப்பட்ட ஆம்புலன்ஸ்

திருச்சியைச் சேர்ந்த குணாளன் - கிருஷ்ணவேனி தம்பதிக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த இரண்டு மணி நேரத்திலேயே மூச்சு விட  மிகவும் சிரமப்பட்டது . 'உயர் சிகிச்சை வழங்க வேண்டும், உடனடியாக சென்னைக்குக் கொண்டுசெல்லுங்கள்' என  மருத்துவர்கள் அறிவுறுத்த, திருச்சியிலிருந்து 30 ஆம்புலன்ஸ்களின் உதவியோடு சரியாக  4 மணி, 10 நிமிடங்களில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது குழந்தை. முதலில், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. 

குழந்தையின் உடல்நிலை தற்போது எப்படியிருக்கிறது என்பதுகுறித்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் அரசரிடம் பேசினோம்,

``  'பல்மனரி ஹைப்பர்டென்சன்' எனப்படும் நுரையீரல் ரத்த அழுத்தப் பிரச்னை காரணமாக, மூச்சுவிட சிரமப்பட்டது குழந்தை. தொடர் சிகிச்சைகளின் மூலமாக, தற்போது குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரலில் ரத்த அழுத்தம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தைக்கு சுவாசம் அளித்துவருகிறோம். இயற்கையாக, குழந்தையால் மூச்சுவிட முடியும்போது வென்டிலேட்டர் அளிக்கப்படுவது நிறுத்தப்படும்`` என்றார் அவர்.

இந்தக் குழந்தை, திருச்சியிலிருந்து நான்கு மணி நேரத்தில் எப்படி சென்னைக்கு அழைத்து வரப்பட்டது என்பதுகுறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க