வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:36 (02/11/2018)

`முடிவு ஆளுநர் கையில்' - 7 பேர் விடுதலைகுறித்து சி.வி. சண்முகம்

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது, இனி ஆளுநர் கையில்தான் உள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். 

சிவி சண்முகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க, தமிழக அரசுக்கு அதிகாரம்  உள்ளது. இது தொடர்பாக, ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைசெய்யலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 7 பேரை விடுதலைசெய்ய வேண்டும் என ஆளுநருக்குக் கடிதம் அனுப்புதல் உள்ளிட்ட போராட்டங்களைத் தமிழ் அமைப்புகள் முன்னெடுத்துவருகின்றன. அதேநேரம், ``7 பேரை விடுதலைசெய்யும் முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது" என தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தகுதிநீக்க வழக்கு தீர்ப்பை அடுத்து, 6 மாதத்தில் இடைத்தேர்தல் வர உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களுடன் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலைப் போல 20 ரூபாய் நோட்டைக் காட்டி வெற்றிபெற்றதுபோன்ற டி.டி.வி. தினகரனின் மோடிமஸ்தான் வேலை இனி எடுபடாதது. அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீதான நடவடிக்கைகுறித்து அ.தி.மு.க தலைமை முடிவெடுக்கும்" என்றார். 

அப்போது, பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``7 பேரை விடுதலை செய்வது இனி ஆளுநர் கையில்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க