`கடனில் விவசாயிகள்; 86,107 ஏக்கர் சாகுபடிக்கு அனுமதி கொடுங்கள்!'- திமுக வலியுறுத்தல் | Water should be opened for the thamirabarani irrigation, says DMK

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (02/11/2018)

கடைசி தொடர்பு:17:15 (02/11/2018)

`கடனில் விவசாயிகள்; 86,107 ஏக்கர் சாகுபடிக்கு அனுமதி கொடுங்கள்!'- திமுக வலியுறுத்தல்

``தாமிரபரணி பாசனத்தை நம்பி உள்ள 86,107 ஏக்கர் பரப்பில் பிசான நெற்பயிர் சாகுபடி, சரியான பருவத்தில் நடந்திட அதற்கான அரசாணையைத் தமிழக அரசு தாமதமின்றி வெளியிட வேண்டும். பாசனத்துக்கான தண்ணீர் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தி.மு.க வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதிகளில் பருவமழையை நம்பியும் தென்பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் பாசனத்தை நம்பியும் விவசாயச் சாகுபடிப்பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கரும் தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கரும் என மொத்தம் 86,107 ஏக்கர் விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலமாகப் பாசனவசதி பெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றுக்குத் தண்ணீர் தரும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பிசான நெற்பயிர் சாகுபடி பணிகளை செய்வதற்கு போதுமான அளவுக்கு இந்த அணைகளின் நீர்மட்டம் உள்ளது. இருந்தபோதிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான நெல் சாகுபடிப் பணிகளை விவசாயிகள் சரியான பருவத்தில் மேற்கொள்வதற்கு ஏதுவாக அதற்கான அரசாணையை அரசு வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்கு உரியதாகும். நெல் சாகுபடிக்கான அரசாணையை வெளியிட்டால் மட்டும்தான் விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியும். பிசான நெற்பயிர் சாகுபடிக்கான அனுமதியை இன்னும் வழங்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜோயல்ஏற்கெனவே, முன்கார் சாகுபடி செய்வதற்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வயல்வெளிகள் அனைத்தும் காய்ந்து கட்டாந்தரைகளானதுடன், ஒட்டுமொத்த விவசாயிகளும் கடனாளிகளாக வாழ்ந்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெற்பயிர் சாகுபடி காலத்துக்கேற்ப சரியான பருவத்தில் நடந்திட அதற்கான அரசாணையைத் தமிழக அரசு தாமதமின்றி வெளியிட வேண்டும். பாசனத்துக்கான தண்ணீர் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தின் வடபகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை நம்பி மானாவாரி பயிர் சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவே தென்பகுதிகளில் தமிழக அரசின் முறையான அனுமதி கிடைக்காதபோதும் ஆங்காங்கே விவசாயிகள் பிசான நெற்பயிர் சாகுபடிக்கான பணிகளைத் தாமாகவே தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் மற்றும் பூச்சிமருந்துகளின் விலை அதிகபட்ச விலையைவிட உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஆங்காங்கே கடைகளில் விற்பனை செய்யப்படும் உரங்களின் எடையளவு குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், ஏற்கெனவே கடனாளிகளாக நொந்துபோய் வாழ்ந்துவரும் விவசாயிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட சரியான விலையில், சரியான எடையில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க