வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (02/11/2018)

மரத்தில் மோதி எரிந்த கார்... தப்பிய குடும்பம்... இறுதிச்சடங்குக்கு வந்தபோது நடந்த துயரம்!

சின்னமனூர் அருகே, சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மரத்தில் மோதிய கார் தீப்பற்றி எரிந்தது

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள மேல சொக்கநகர்புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர், பெங்களூரில் வசித்துவருகிறார். இந்நிலையில், தனது குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக காரில் வந்துள்ளனர்.  சின்னமனூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் பயணம்செய்த முருகன், மனைவி ஜெயந்தி, அவரது இரு மகன்கள்  ஆகியோர் காரிலிருந்து குதித்து படுகாயத்துடன் உயிர் தப்பினர்.

பற்றி எரிந்த கார்

சம்பவம் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீக்காயங்களுடன் நால்வரும், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்திவருகின்றனர். சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததைப் பார்த்து, அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.