வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (02/11/2018)

கடைசி தொடர்பு:18:05 (02/11/2018)

`ஸ்டெர்லைட் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நீட்டிக்கணும்’ - அகர்வால் குழுவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஸ்டெர்லைட்

கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் போலீஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாயினர். அதைத் தொடர்ந்து மே மாதம் 28-ம் தேதி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி மூவர் குழுவினர் கடந்த மாதம் தூத்துக்குடி வந்து சில பகுதிகளில் ஆய்வு நடத்தினர். கருத்துக்கேட்புக் கூட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், அகர்வால் குழு மேலும் இரண்டு நாள்கள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த பொதுநல மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் அகர்வால் தலைமையிலான குழு கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றது. மனு அளிப்பது தொடர்பாக முறையான விளம்பரம் செய்யாததால் பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரடியாகப் பார்வையிடவில்லை'' எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் பகுதி மக்கள் பங்கேற்கும் வகையில் கருத்துக்கேட்புக் கூட்டம் மேலும் இரண்டு நாள்கள் நடத்த வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க தருண் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை நான்கு வாரங்கள் ஒத்தி வைத்துள்ளது.