வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (02/11/2018)

கடைசி தொடர்பு:17:43 (02/11/2018)

``குங்ஃபூவில் 40-க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் பயிற்சி எடுக்கிறோம்!” - மல்லை சத்யா

ஜப்பான் நாட்டின் பிரபல தற்காப்புக் கலையான சாமுராய் என்ற பயிற்சியை நாங்கள் தற்போது எடுத்து வருகிறோம். 40-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தி வருகிறோம்.

``குங்ஃபூவில் 40-க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் பயிற்சி எடுக்கிறோம்!” - மல்லை சத்யா

குங்ஃபூ கலையில் சிறந்து விளங்கிய மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த மாஸ்டர் ராஜசேகரின் நினைவுநாள் ஒவ்வோர் ஆண்டும் மாமல்லபுரம் அடுத்துள்ள வடகடும்பாடியில் மன்சூர்யா குங்ஃபூ இன்டர்நேஷனல் பயிற்சிக் கூடத்தில் அனுசரிக்கப்படும். தனது குருவுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இதில் கலந்துகொள்வார். இந்த நிகழ்வின்போது குங்ஃபூ போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெறுபவர்களுக்குப் பட்டை வழங்கப்படும். இதில் இந்தியா முழுவதிலிருந்தும் குங்ஃபூ வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வார்கள்.

யார் இந்த சேகர் மாஸ்டர்?

ராஜசேகர், குங்ஃபூ மாஸ்டர்

சிறுவயதில் ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்து, அங்கு வேலை செய்த குங்ஃபூ மாஸ்டர் ஒருவரிடம் குங்ஃபூ கற்றுக்கொண்டவர் ராஜசேகர். 1983-ல் மன்சூர்யா குங்ஃபூவில் இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் பெற்றவர். சேகர் மாஸ்டர் என அவரது மாணவர்கள் சுருக்கமாக அழைப்பார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களையும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குங்ஃபூ மாணவர்களையும் உருவாக்கியவர். மாமல்லபுரத்தை அடுத்துள்ள வடகடும்பாடியில் மன்சூர்யா குங்ஃபூ இன்டர்நேஷனல் பயிற்சிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். குங்ஃபூ கோயில் என்றுதான் இதை அழைக்கிறார்கள். சினிமாவில் ஆர்வம் இல்லாவிட்டாலும், சௌத்ரியின் வற்புறுத்தலால் `முகமூடி' படத்தில் ஜீவாவுக்கு குங்ஃபூ மாஸ்டராக நடித்திருந்தார். நாகேந்திர பிரசாத், ஜாக்கி ஷெராப், பட்டாபிராம் சேகர், ராம்லட்சுமணன் என இந்திய சினிமா துறையில் நிறையபேர் இவரிடம் குங்ஃபூ பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள் இவரிடம் குங்ஃபூ பயின்றிருக்கிறார்கள். மல்லை சத்யாவின் மானசீக குரு சேகர் மாஸ்டர்.

மல்லை சத்யா, குங்ஃபூ

மாமல்லபுரத்தில் நடந்துவரும் குங்ஃபூ போட்டிகளில் நடுவராக மல்லை சத்யா கலந்துகொண்டு போட்டிகளை நடத்திவருகிறார். இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குங்ஃபூ மாஸ்டர் மேத்யூ கலந்துகொண்டு 7-வது கறுப்புப் பட்டையைப் பெற்றார். குங்ஃபூ இன்டர்நேஷனல் சாம்பியன் ரவீந்திரன், களரி, சிலம்பம், குங்ஃபூ போன்ற கலைகளில் சிறந்து விளங்கும் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் அசோக்குமார், மணிப்பூரைச் சேர்ந்த ஷாந்திகுமார சிங் ஆகிய மூன்று பேரும் மேத்யூவுக்குப் பயிற்சி கொடுத்திருந்தார்கள்.

மல்லை சத்யா குங்ஃபூ பயிற்சி

மல்லை சத்யாவிடம் பேசினோம், ``சீனாவில் குங்ஃபூ தற்காப்புக் கலையைப் பரப்பிய போதி தர்மர் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அவரின் தற்காப்புக் கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக இளைஞர்களுக்குத் தொடந்து பயிற்றுவித்து வருகிறோம். இன்று, போதையில் இளைஞர்கள் அடிமையாகிவருகிறார்கள். தற்காப்புக் கலையைப் பயிலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக மாட்டார்கள். அவர்களுக்கு உடல் வலிமையோடு, மனவலிமையும் அதிகரிக்கும். என்னுடைய முதல் அடையாளம் குங்ஃபூதான். இதில் கிடைத்த பிரபலத்தினால்தான் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் அறிமுகமானேன். முழுநேர அரசியலில் இருந்தாலும் குங்ஃபூ பயிற்சி மேற்கொள்வதை இன்றளவும் நான் தொடர்கிறேன். எனது அடித்தளத்துக்கு வித்திட்ட சேகர் மாஸ்டரின் ஒவ்வொரு நினைவு நாளின்போதும் மாமல்லபுரத்தில் அஞ்சலி செலுத்தி, குங்ஃபூ போட்டிகள் நடத்திவருகிறோம். ஜப்பான் நாட்டின் பிரபல தற்காப்புக் கலையான சாமுராய் என்ற பயிற்சியை நாங்கள் தற்போது எடுத்து வருகிறோம். 40-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தி வருகிறோம்” என்றார். அந்த அறை முழுவதுமே ஆயுதங்களால் நிரம்பியிருக்கிறது.

மல்லை சத்யா குங்ஃபூ போட்டி

7-வது கறுப்புப் பட்டை பெற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேத்யூ, ``இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து சேகர் மாஸ்டரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். தற்போது பிரான்ஸ் முழுவதும் 700 மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கிறேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது. சேகர் மாஸ்டருக்கு பிரெஞ்சு தெரியாது. இந்த நிலையில் சேகர் மாஸ்டர் உடல் அசைவுகளைப் பார்த்து இந்தக் கலையை உள்வாங்கிக் கொண்டேன். நான் வழிதவறி கரடுமுரடான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவன். சேகர் மாஸ்டரைச் சந்தித்த பிறகு எனது பாதையை மாற்றிக்கொண்டேன். என்னை ஒதுக்கிய குடும்பத்தினர் எல்லோரும், இன்று எனக்காக உழைக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் குங்ஃபூவைக் கற்கும் அனைவரும் போதி தர்மர் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். புலி, குரங்கு, பாம்பு போன்ற விலங்குகளின் ஸ்டையிலில் கற்றுக் கொடுப்பதால் குங்ஃபூ கலை, இளைஞர்களை ஈர்க்கிறது. பிரான்சில் 30-க்கும் மேற்பட்ட விதங்களில் ஆயுதங்கள்வைத்து கற்றுக் கொடுக்கிறேன். ஒவ்வொரு வருடமும் சேகர் மாஸ்டர் நினைவு தினத்தன்று இந்தியா வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வேன்” என சேகர் மாஸ்டருடன், தான் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார். 

குருவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிறந்த மாணவர்களுக்கு இவர்கள் உதாரணம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்