போனஸ் கொடுக்கக் காத்திருந்த புரோக்கர்கள்! தெறிக்கவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் | DAVC officials conduct raid at tanjore RTO office

வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (02/11/2018)

கடைசி தொடர்பு:18:48 (02/11/2018)

போனஸ் கொடுக்கக் காத்திருந்த புரோக்கர்கள்! தெறிக்கவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ்

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அதன் நிர்வாகம் தீபாவளி போனஸ் கொடுப்பது வழக்கம். அரசு ஊழியர்களுக்கு அரசு போனஸ் கொடுக்கும் என்பதும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதுமையான முறையில்  போனஸ் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம்

புரோக்கர்கள் மூலமாக அணுகினால்தான் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எந்த ஒரு காரியமும் எளிதில் முடிக்க முடியும் என்ற நிலை இருந்துவருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள்,  கடந்த சில நாள்களாக தங்களுக்குள் பேசிக்கொண்ட சங்கேத வார்த்தைகள் மிகவும் சுவாரஸ்யமானது.  ‘’இன்னைக்கு போனஸ் வந்துடும்னு நினைக்கிறேன். எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வந்து போனஸ் கொடுத்துடுறோம்னு சொல்லியிருக்காங்க” என  பேசிக்கொண்டிருந்ததைப் பட்டும் படாமலும் காதில் வாங்கிய பொதுமக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், தீபாவளியை முன்னிட்டு நேற்று  பல புரோக்கர்கள் இங்கு ஒன்றுகூடியிருக்கிறார்கள். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் மாமூல் கொடுக்க தயாராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இங்கு அதிரடி ரெய்டு நடத்த வந்திருக்கிறார்கள். இவர்களைக் கண்டதும் புரோக்கர்கள் தலைதெறிக்க ஒட்டமெடுத்து எஸ்கேப் ஆனார்கள். ஆர்.டி.ஒ அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, ஆர்.டி.ஒ கார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் அறைகளில் உள்ள மேஜை, பிரோக்களில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். புரோக்கர்கள் ஓட்டமெடுத்துவிட்டதால் பணம் எதுவும் சிக்கவில்லை. ’தீபாவளிக்கு இன்னும் 5 நாள்கள் இருக்கு. அதுக்குள்ள கண்டிப்பாக, வெளியில எங்கேயாவது புரோக்கர்களைச் சந்திச்சி, போனஸை வாங்கிடுவாங்க “ என தெரிவித்தார்  தஞ்சாவூர்  வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உள்விவகாரங்களை நன்கு அறிந்த ஒருவர்.