வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (02/11/2018)

கடைசி தொடர்பு:19:22 (02/11/2018)

‘அரசு கட்டடங்களில்தான் அதிக கொசுக்கள் உற்பத்தியாகின்றன’ - கொந்தளிக்கும் மருத்துவர் சங்கம்

சமீபத்தில், தமிழகத்தின் பல இடங்களிலும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொசு

இதுகுறித்துப் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி,  “காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஒருவருக்குக்கூட ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் குறையவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தி வெளியிட்டுள்ளார். மருத்துவத்தைப் பொறுத்தவரை பிளேட்லெட்ஸ் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்பே டெங்குவை உறுதிப்படுத்தும் பரிசோதனை செய்யப்படும். ஆக, டெங்கு பாதிப்பு 90 பேருக்கு இருந்தும் ஒருவருக்குக்கூட பிளேட்லெட்ஸ் குறையவில்லை என ஆட்சியர் செய்தி வெளியிட்டிருப்பது டெங்குவைப் பற்றி அவருக்கு உள்ள அறியாமையையே வெளிப்படுத்துகிறது. 

ஒரகடத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் நான்கு தொழில் நிறுவனங்களுக்கு, டெங்கு கொசுக்கள் உருவாகும் சூழலை ஏற்படுத்தியதால், மாவட்ட நிர்வாகத்தினர் அபராதம் விதித்துள்ளார். இருப்பினும், அந்தத் தொழில் நிறுவனங்களில் பணிசெய்யும் ஊழியர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகச் செய்திகள் இல்லை. அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என எடுத்துக்கொண்டால், ஏன் பிற இடங்களில் எந்த நடவடிக்கையும் இல்லை. 

 செங்கல்பட்டு மருத்துவமனையில், 6 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு பிளேட்லெட்ஸ்  குறைவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவனுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும் முடிவு தெரிய 3 நாள்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக டெங்கு பரிசோதனை முடிவு அன்று அல்லது மறுநாளில் தெரியவரும் என்ற நிலையில், முடிவு தெரிய  3 நாள்கள் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுகூட, 3 நிறுவனங்களுக்கு டெங்கு கொசு வளரும் சூழலை ஏற்படுத்தியதால்  மாவட்ட நிர்வாகம் அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. ஆனால், சமீபத்திய மழைக்குப் பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நீர் தேங்கி, கொசு வளரும் சூழல் உருவாகியதற்கு அரசு பொறுப்பாகாதா? அதற்குக் காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் இல்லையா...  சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில், கொசு வளரும் சூழலை அதிகமாக  ஏற்படுத்துவது அரசுக் கட்டடங்கள்தான் எனத் தெரிவித்திருந்தும், அந்த அரசு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. ஆக, மக்களே கொசு உருவாகும் சூழலை ஏற்படுத்துவதற்குக் காரணம், உரிய நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பாதது காரணம், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததுதான் காரணம் எனப் பிறர்மீது மட்டும் பழிபோடாமல், அரசு அதிகாரிகள் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, டெங்கு பாதிப்பின் இறப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.