வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (02/11/2018)

திருச்சியை அதிரவைக்கும் மணல் கொள்ளை! - வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்

மணல் கடத்தல் சம்பவங்களில் அதை எதிர்ப்பவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் திரில்லர் படத்தை விஞ்சும் வகையில் உள்ளன.

கோட்டாட்சியரிடம் மனு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த திருவாசி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், லாரிகளில் சட்டவிரோதமான மணல் அள்ளுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தாலும், நடவடிக்கை இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்தநிலையில், கடந்த 11-ம் தேதி இரவு 1 மணியளவில், திருவாசி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொக்லைன் வாகனம் மூலம் மூன்று லாரிகளில் மணல் அள்ளப்படுவது தெரிந்த அப்பகுதி மக்கள், மணல் லாரிகளை விரட்டிப்பிடித்த சம்பவத்தில், மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் நந்தகுமார்  மற்றும் அவரது லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகா கையும்களவுமாகப் பிடிபட்டதாகக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர், அதிரடியாக மணப்பாறை டி.என்.பி.எல்-லுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட திருச்சி மண்ணச்சநல்லூர் தாசில்தாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கம், ம.தி.மு.க, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தாசில்தார் ரேணுகா மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் ம.தி.மு.க புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் சேரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள், திருச்சி மாவட்ட கோட்டாட்சியர்  சாந்தியிடம் தாசில்தார் ரேணுகா மணல் கடத்தலில் ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரத்துடன்கூடிய மனுவை அளித்தனர்.

ஆடியோ ஆதாரத்துடன் மனு

`மணல் கடத்தலில் ஈடுபட்ட தாசில்தார் ரேணுகா மீது தமிழக அரசு கொண்டு வந்த அரசாணைப்படி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தாசில்தார் ரேணுகாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என ஆவேசமாகச் சமூக ஆர்வலர் முகிலன் முழங்கினார். மணல் கடத்தல் சர்ச்சையில் சிக்கிய தாசில்தார் ரேணுகா, மணல் கடத்தல் குறித்து அவருக்குத் தகவல் சொன்னவர்களிடம், இனி போன் பண்ணினால் உன்னை பொய் வழக்குப் போட்டு ஜெயிலில் அடைத்துவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூர், அய்யம்பாளையம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தாசில்தார் பறிமுதல் செய்தார்.

மணல் கடத்தல் குறித்து ஏவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மகன் ஆனஸ்ட்ராஜ்  என்பவர்தான், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம், தாஸ், சேட்டு ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. முசிறி அருகே உள்ள அய்யம்பாளையத்துக்கு பொருள்கள் வாங்கச் சென்ற ஆனஸ்ட்ராஜை, முருகானந்தம், தாஸ், சேட்டு ஆகிய மூன்று 3 பேரும் வழிமறித்து தகராறு செய்து நேற்று கத்தியால் குத்தினர். இதில் ஆனஸ்ட்ராஜ் படுகாயமடைந்தார். இதையடுத்து மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிந்து தலைமறைவான முருகானந்தம், தாஸ், சேட்டு ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர். ஒரு புறம் அதிகாரிகள் மணல் கடத்தியதும், மணல் கடத்தலுக்குத் தகவல் கூறிய நபர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் திருச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மணல் கடத்தல் குறித்து போலீஸாருக்கு தகவல் கூறிய சுறு சோழன் என்பவர் மணல் கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளாகிப் பலியான சம்பவம் முசிறிப் பகுதியில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க