`அனுமதியின்றி 6 ஆண்டுகளாக இயங்கும் அனல்மின் நிலையம்!’ - அரசிடம் விளக்கம் கேட்ட நீதிமன்றம் | Madurai hc sends notice to central, state governments over alleged illegal thermal power plant near thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (02/11/2018)

`அனுமதியின்றி 6 ஆண்டுகளாக இயங்கும் அனல்மின் நிலையம்!’ - அரசிடம் விளக்கம் கேட்ட நீதிமன்றம்

தூத்துக்குடியில், வேதாந்தா நிறுவனம் தன் மின்சாரத் தேவைக்காக இயக்கிவந்த  அனல்மின் நிலையம், உரிய  அனுமதியின்றி செயல்பட்டுவருவதாக, அதற்குத் தடைகோரி  தொடரப்பட்ட வழக்கில்,  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

வழக்கறிஞர் முத்துராமன்தூத்துக்குடியில், உரிய அனுமதி இன்றி  செயல்பட்டுவந்த வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் நிலையத்தைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராமன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,” தூத்துக்குடி மாவட்டம்  மீளவிட்டானில், வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான அனல்மின் நிலையம் உள்ளது. இந்த அனல்மின் நிலையம், ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது, ஆலைக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கியது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதியுடன் இயங்கிவந்த இந்த அனல்மின் நிலையம்,  பல ஆண்டுகளாகத் தனது இயக்குதலுக்கான உரிமத்தைப் புதுப்பிக்காமல் உள்ளது. இந்த அனல் மின் நிலையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு  மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைசெய்த நீதிபதிகள் அமர்வு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேதாந்தா நிறுவனம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர். 

இந்த வழக்குகுறித்து முத்துராமனிடம் பேசினோம். ”மீளவிட்டானில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான அனல்மின் நிலையம், 60 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட, 2 யூனிட்டுகளைக் கொண்டது. இதை நிறுவ, கடந்த 2007-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம்  அனுமதிபெறப்பட்டது. இந்த அனுமதியின் முடிவுக் காலம் 2012 மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. 

இந்த  அனுமதிக் காலத்துக்குள், அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கப்படவில்லை. ஆனால், 2012-ல் 60 மெகாவாட் உற்பத்தியை 80 மெகவாட் திறனாக உயர்த்தி நிறுவிக்கொள்ள அனுமதி கோரப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையுடன்  6.9.12-ல் அனுமதி அளிக்கப்பட்டது.  ஆனாலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. கடந்த 2012 முதல் தற்போது வரை அனல்மின் நிலையம் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலேயே இயங்கிவந்துள்ளது.

இவ்வாறு செல்லத்தக்க சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் இயங்க முடியாது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 15-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றத்தைக் கண்டிக்கும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 19-ன் கீழ் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவுசெய்ய வேண்டும். அத்துடன், அனல் மின்நிலையத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க