பிரமாண்ட கடையில் தீபாவளி ஆடைகளைத் தேர்வுசெய்த ஆதரவற்ற குழந்தைகள்! | orphaned children are taken to a textile shop for deepawali purchase

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:00:00 (03/11/2018)

பிரமாண்ட கடையில் தீபாவளி ஆடைகளைத் தேர்வுசெய்த ஆதரவற்ற குழந்தைகள்!

நெல்லையில் உள்ள சமூக நல அமைப்புகளின் முயற்சியால், ஆதரவற்ற குழந்தைகள், தீபாவளிப் பண்டிகைக்கு தங்களுக்குத் தேவையான புத்தாடைகளை எடுக்க நேரடியாக கடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

நெல்லையில் உள்ள சமூக நல அமைப்புகளின் முயற்சியால், ஆதரவற்ற குழந்தைகள், தீபாவளிப் பண்டிகைக்குத் தங்களுக்குத் தேவையான புத்தாடைகளைத் தேர்வுசெய்ய நேரடியாக கடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 

புத்தாடைகளை தேர்வு செய்யும் குழந்தைகள்

குழந்தைகளைப் பொறுத்த வரை, தீபாவளி என்பது புத்தாடை மற்றும் பட்டாசு இல்லாமல் முழுமையடையாது. தீபாவளி பண்டிகையின் வருகைக்காகக் காத்திருந்து, தங்களின் குடும்பத்தினருடன் புத்தாடைகளைத் தேர்வுசெய்வதற்காக கடைகளுக்குச் செல்லும்போது ஏற்படக் கூடிய மகிழ்ச்சிக்கு இணையேதும் கிடையாது. ஆனால், ஆதரவற்ற குழந்தைகளின் நிலைமை என்னவாக இருக்கும்? இப்படிச் சிந்தித்த சமூக நல ஆர்வலர்கள், 60 ஆதரவற்ற குழந்தைகளை நேரடியாக நகரின் பிரமாண்டமான ஜவுளிக்கடைக்கு அழைத்துச்சென்று தங்களுக்கான தீபாவளி புத்தாடைகளைத் தேர்வுசெய்யவைத்து மகிழ்வித்தனர். 

நெல்லையில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ‘சரணாலயம்’ என்ற மையம் செயல்பட்டுவருகிறது. அந்த இல்லத்தில், ஆதரவற்ற நிலையில் உள்ள 12 சிறுவர்களும்  24 சிறுமியர்களும் தங்கியுள்ளனர். இந்த இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில், புத்தாடைகள் வழங்குவதைப் பல்வேறு அமைப்பினரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை, தங்களுக்குப் பிடித்த உடைகளைத் தாங்களே தேர்வுசெய்வதையே விரும்புவார்கள் என்பதை உணர்ந்த 'அன்னை தெரசா அறக்கட்டளை' என்ற அமைப்பைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது நண்பர்களான பஷீர், பெருமாள் ஆகியோர், ஆதரவற்ற குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்துச்செல்ல முடிவுசெய்தனர். அதன்படி, சமூக ஆர்வலரான அந்தோணிகுரூஸ், சரணாலயம் இல்லத்தின் தலைவரான ஜெயபாலன் ஆகியோரின் தலைமையில், 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள பெரிய ஜவுளிக்கடைக்குச் சென்றனர். 

அந்தக் கடையில்; குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒரு செட் உடைகளைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்பட்டனர். உற்சாக மிகுதியாலும், மின்னொளியில் ஜொலித்த கடையின் பிரமிப்பாலும் உந்தப்பட்ட சிறுவர் சிறுமியர், தங்களின் நண்பர்களுடன் கலந்துபேசி, உற்சாகமாக துணிகளைத் தேர்வுசெய்தனர். தங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தில், விரும்பிய வகையிலான உடைகளைத் தேர்வுசெய்த பெருமிதமும் மகிழ்வும் ஒவ்வொருவரின் முகத்திலும் காணப்பட்டது. 

புத்தாடை தேர்வு

துணிகளைத் தேர்வுசெய்த பின்னர், அனைவரையும் அருகில் உள்ள உணவகத்துக்கு அழைத்துச்சென்று, அருசுவை உணவு வழங்கி மகிழ்வித்தனர். அத்துடன், குழந்தைகளுக்காகவே சிவகாசியில் பிரத்தியேகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்ட பட்டாசு பாக்கெட்டுகள், ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டதால் சிறுவர்களின் உற்சாகம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டையில் உள்ள ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 24 குழந்தைகள், அதே கடைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களும் தங்களுக்குப் பிடித்தமான உடைகளைத் தேர்வுசெய்தனர்.

புத்தாடைகளுடன் உற்சாகத்தில் இருந்த சிறுவர்களிடம் பேசியபோது, ‘’இந்த ஆண்டு மாதிரி இதுவரையிலும் எங்களுக்கு தீபாவளிப் பண்டிகை இருந்ததே இல்லை. ஜவுளிக்கடையின் உள்ளே எங்களை கூட்டிட்டு போய், விரும்பிய உடைகளைத் தேர்வுசெய்யவைத்தது மறக்கவே முடியாது. அந்தக் கடையின் உள்ளே நுழைந்தபோது ஏற்பட்ட குளுமையான அனுபவம் மறக்கவே முடியாதது’’ என்று நெகிழ்வுடன் பேசினார்கள். 

மகேஷ்இந்த ஏற்பாடுகளை மேற்கொண்ட சமூக ஆர்வலர் மகேஷிடம் பேசியபோது, ‘’ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வாங்கிக்கொடுப்பது என நண்பர்களுடன் சேர்ந்து முடிவுசெய்தோம். நாம் தேர்வுசெய்த துணிகளைக் கொண்டுபோய் கொடுப்பதைவிடவும், அவர்களுக்குப் பிடித்தமானதை வாங்கிக்கொடுப்பது என முடிவுசெய்து, குழந்தைகளை கடைக்கு அழைத்துச்சென்றோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே சிறுவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக அதை அனுபவித்தார்கள்.

நாங்கள் ஆதரவற்ற குழந்தைகளை அழைத்துவந்திருப்பதை அறிந்த கடையின் உரிமையாளர், அவராகவே முன்வந்து 25 சதவிகிதம் பணத்தை அவர் தரப்பில் கொடுக்க முன்வந்தார். அந்த அளவுக்கு எங்களின் முயற்சிக்கு வரவேற்புக் கிடைத்தது. துணிகளைத் தேர்வுசெய்யும்போது சிறுவர், சிறுமியரிடம் ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளே கிடையாது’’ என்றார். 

கைகளில் புத்தாடை, பட்டாசு பாக்கெட் என உற்சாக மகிழ்வுடன் திரும்பிச்சென்ற சிறார்களின் முகத்தில் கடவுளைப் பார்க்க முடிந்தது. அதற்குக் காரணமான சமூக ஆர்வலர்களின் மனிதாபிமானச் சேவை பாராட்டுக்குரியது.