வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:07:07 (03/11/2018)

அ.தி.மு.க பேனர்கள் கிழிக்கப்பட்ட வழக்கு; அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்

பசும்பொன்னில் அ.தி.மு.க-வினர் வைத்திருந்த வரவேற்பு பேனர்களை சேதப்படுத்திய வழக்கில் அ.ம.மு.க நிர்வாகிகள் 21 பேருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அ.ம.மு.க ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்ட பேனர்கள்

கடந்த 30-ம் தேதி பசும்பொன்னில் நடந்த குருபூஜை விழாவில் பங்கேற்க வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை வரவேற்று நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அ.தி.மு.க சார்பில் பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்கள் அ.ம.மு.க தொண்டர்களால் கிழித்து சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கைது செய்யப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள்

இதைத் தொடர்ந்து அ.ம.மு.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பரமக்குடி எம்.எல்.ஏ டாக்டர் முத்தையா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கூறப்பட்ட  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அ.ம.மு.க நிர்வாகிகள் பலர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகள் 52 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை போலீஸார் தேடி வருகின்றனர்..

 இந்த நிலையில், மாவட்டச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் நிபந்தனையற்ற முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மாவட்டச் செயலாளர் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் முத்தையா உள்ளிட்ட 21 பேர்களுக்கும் நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.