வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:07:12 (03/11/2018)

துப்பாக்கிச்சூடு வழக்கில் சி.பி.ஐ இணை இயக்குநருக்கு நோட்டீஸ் - மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யாத சி.பி.ஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், சி.பி.ஐ இணை இயக்குநர் சின்ஹாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவும்,  இச் சம்பவத்துக்கு காரணமான காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாகவும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ``நீதிமன்ற உத்தரவின்படி எங்களது புகாரின் பேரில் காவல்துறையினர், அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் சி.பி.ஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சி.பி.எம்., கட்சி மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்  குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பே காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சி.பி.ஐ-க்கு கடந்த மே 29-ல் புகார் மனு அனுப்பப்பட்டது. இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி மதுரைக்கிளை உத்தரவு அளித்ததும், இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தக்கோரியும் சி.பி.ஐ-யிடம் மனு அளிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு

சி.பி.ஐ விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் சி.பி.ஐ-க்கு கடந்த ஆகஸ்ட் 31-ல் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல், துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் கடந்த அக்டோபர்  8-ல் மீண்டும் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்  சி.பி.ஐ அதிகாரிகள்.

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி நாங்கள் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யாதது உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்வதாகும். இது தொடர்பாக, சி.பி.ஐ இணை இயக்குநருக்கு கடந்த அக்டோபர் 12-ல் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினோம். அதன் பிறகும்  நீதிமன்ற உத்தரவின்படி எங்களது புகாரின் பேரில் காவல்துறையினர், அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யவில்லை.

எனவே, சி.பி.ஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு,  நீதிமன்ற அவமதிப்பு மனு தொடர்பாக சி.பி.ஐ இணை இயக்குநர் பிரவீன்சின்ஹா பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க