வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:07:45 (03/11/2018)

``உங்கள் மந்திரியுடன் விவாதம் செய்யுங்கள்!" - கோவையில் நிர்மலா சீதாராமன் காட்டம்

``என்னுடன் விவாதிப்பதை விட்டு விட்டு உங்கள்  மந்திரிகளுடன் விவாதம்  செய்யுங்கள்” என்று தொழில்முனைவோர் ஒருவருக்கு கோவையில் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கான சிறப்புச் சலுகைகள் அறிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.  அதில் பிரதமர் பல புதிய அறிவிப்புக்களை வெளியிட்டார். இதை கோவை தொழில் துறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பு காணொலி நிகழ்ச்சி மற்றும் விளக்கக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ``அரசு நிறுவனங்களுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவது 20 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெண்கள் நடத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிலிருந்து 3 சதவிகிதம் கொள்முதல் செய்யப்படுகிறது. வங்கிக் கடன் வாங்குவதற்கு உத்திரவாத ஆவணங்கள் கேட்கக்கூடாது, அப்படி கேட்கும் வங்கிகள் குறித்து புகார்கள் வந்தால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். 100  கிளஸ்டர்களில் இன்று பிரதமர் அறிவித்துள்ள அறிவிப்புகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பதை தானே கண்காணிப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 100 கிளஸ்டர் மையங்களில் தமிழகத்தில் கோவை, வேலூர், திருவள்ளூர், திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு ஆகிய பகுதிகள் இருக்கிறது. இதில் எது கிளஸ்டர் மையம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.  ஜாப்-ஒர்க்  செய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொழில் முனைவோர் வைத்துள்ளார்கள். இதில் ஜி.எஸ்.டி கவுன்சில் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இதே கோரிக்கையைப் பற்றி தமிழக அமைச்சர்களிடத்தில் நானும் விவாதித்துள்ளேன். இந்த கோரிக்கையை ஜி.எஸ்.டி கவுன்சிலில் தமிழக அமைச்சர்களும் தெரிவிக்க வேண்டும் நானும் பேசுவேன்” என்ற நிர்மலா சீதாராமனிடம், தொழில்முனைவோர் ஒருவர் ஜி.எஸ்.டி தொடர்பாக சில  கேள்விகள் கேட்டார்.

அதற்குப் பதில் சொல்ல மறுத்த நிர்மலா சீதாராமன், ``என்னுடன் விவாதிப்பதை விட்டு விட்டு உங்கள் மந்திரிகளுடன் விவாதம்  செய்யுங்கள்.  அவர்கள் ஜி.எஸ்.டி கவுன்சிலில் போய் முறையிடட்டும்” என தெரிவித்தார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டு,  ``இது தொடர்பாக முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரிடம் பேசி இருக்கிறோம். வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங்கில் உங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்” என்று  விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து  மத்திய அமைச்சர் சீதாராமனிடம்,  மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் மாநில அரசுக்கு வருவதில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ``தம்பிதுரை எந்த திட்டம் தமிழகத்துக்கு வரவில்லை என  பேசினார் என்பதை பற்றி எனக்குத் தெரியவில்லை. முதல்வர் மூலமாக வந்த கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேற்றப்பட்டது. கேட்கப்பட்ட நிதி உதவி அளிக்கப்பட்டது. அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தம்பிதுரை எதைப்பற்றி பேசுகின்றார் என்பது தெரியவில்லை அதனால் அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்றார்

ரஃபேல் விமான ஊழல் குறித்த கேள்விக்கு, 'ராகுல் காந்தி ரஃபேல் விமான பிரச்னை குறித்து ஒவ்வொரு நாளும்  ஒவ்வொன்றாக பேசிவருகிறார். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் குறித்த கேள்விகள் தவிர மற்ற கேள்விகளுக்கு இப்போது பதில் அளிக்கமுடியாது” என்று முடித்துக்கொண்டார்.