தீபாவளி வசூல் வேட்டை - லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர் | Deepavali collection hunt

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (03/11/2018)

கடைசி தொடர்பு:10:32 (03/11/2018)

தீபாவளி வசூல் வேட்டை - லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்

தீபாவளி வசூலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வளைத்துப் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் இருக்கிறது திருநாவலூர் காவல் நிலையம். இங்கு பணிபுரியும் போலீஸ்காரர்கள் தீபாவளியை முன்னிட்டு அனைத்துக்கட்சி அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து பணம் மற்றும் பரிசுப் பொருள்களை வாங்கிக் குவித்து வருவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் சென்றது. அந்தத் தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தேவநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான ஒன்பது போலீஸார் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இரண்டு வாகனங்களில் சென்று திருநாவலூர் காவல் நிலையத்தைச் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து காவல் நிலையத்தின் கதவுகளை உள்பக்கமாக தாழிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்சம்

அப்போது அங்கிருந்த டேபிள் டிராயர்களில் கட்டுக் கட்டாக பணமும், அறைகளில் பட்டாசுப் பெட்டிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸிடம் தீவிர விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், அவரை போலீஸ் குடியிருப்பில் இருந்த அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கும் பெட்டிப் பெட்டியாக பட்டாசுகள், புத்தம் புதிய ஆடைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

இந்த அதிரடி சோதனையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 120 பட்டாசுப் பெட்டிகள், 50-க்கும் மேற்பட்ட பேன்ட, சட்டை உள்ளிட்ட புதிய ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து மறுபடியும் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸிடம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கிளம்பிச் சென்றனர். இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பட்டாசுக்களை வெடித்து வரவேற்றனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார் விழுப்புரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி ஜெயக்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க