வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (03/11/2018)

கடைசி தொடர்பு:12:40 (03/11/2018)

‘ஆர்.பி.உதயகுமாருக்கு புது அசைன்மெண்ட்!’ - தினகரன் அணியை கலைக்க வியூகம்

சமீபத்தில் பசும்பொன்னுக்கு முதலமைச்சர் வருகை தந்தபோது வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை தினகரன் அணியினர் கிழித்து நாசப்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பியது எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோருக்கு பெரும் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தினகரன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆத்திரம் அடங்காத எடப்பாடி தரப்பு நமது அம்மா நாளிதழில் தினகரன் அணியினரை கடுமையாகத் தாக்கி எழுதி வருகிறார்கள். இந்த நிலையில், தினகரன் அணியிலுள்ள முக்கிய நிர்வாகிகளை கன்வின்ஸ் செய்து மீண்டும் அ.தி.மு.க-வுக்கு இழுத்து வரும் அசைன்மென்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வசம் எடப்பாடி ஒப்படைத்துள்ளதாக அ.தி.மு.க-வினர் கூறுகிறார்கள். அதற்கான வேலைகளில் உதயகுமார் தீவிரமாக இறங்கியுள்ளார். 

மதுரையில் அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய ஆர்.பி.உதயகுமார், தினகரன் அணியிலுள்ளவர்களை மீண்டும் எப்படி தாய் கழகத்துக்குக் கொண்டு வரலாம் என்பது பற்றி பேசியிருக்கிறார். பிறகு பொதுவாக பேசும்போது, ``பசும்பொன்னில் மக்கள் வரவேற்கவில்லை, யாரும் தனக்கு பேனர் வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தினகரன் தன் அடியாட்களை வைத்து மக்கள் தெய்வமாக வணங்கும் தேவர் திருமகனாரின் படம், ஜெயலலிதா படம்  தாங்கி கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட  பேனர்களை கிழித்து எறிந்து காட்டு தர்பார் நடத்தியுள்ளனர். இதன் மூலம் முதலமைச்சர், துணை முதலமைச்சரின் நிழல்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களின் செயலை மன்னிக்க முடியாது. ஒன்னரைக்கோடி தொண்டர்களால் தமிழர் குலச்சாமியாக வணங்கப்படும் ஜெயலலிதாவின் புகழை களங்கப்படுத்திய தினகரனுக்கு தலைமையிடம் அனுமதி பெற்று அம்மா பேரவை சார்பாக தகுந்த பாடம் புகட்டுவோம்'' என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். 

பசும்பொன் வருகையில் பேனர்களை கிழித்து குழப்பத்தை ஏற்படுத்திய தினகரன் அணியினர் மீது எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் கடும் கோபத்தில் இருப்பதால்தான், தினகரனும்-ஸ்டாலினும் மதுரையில் ஒரே ஹோட்டலில் தங்கி ஆலோசனை நடத்தினார்கள் என்ற தகவலை பரப்பி டி.டி.வி அணியிலுள்ளவர்களைக் குழப்பமடைய வைத்தனர். அடுத்ததாக டி.டி.வி அணியிலுள்ள முக்கிய நிர்வாகிகளை இழுத்து தினகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பொறுப்பையும் ஆர்.பி.உதயகுமாரிடம் எடப்பாடி ஒப்படைத்துள்ளார் என்று அ.தி.மு.க-வினர் கூறுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க