வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:12:00 (03/11/2018)

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலம் மெயின் அருவி

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கும் சீசன் மூன்று மாதங்களுக்கு நீடிப்பது வழக்கம். இந்த ஆண்டு சீசன் களைகட்டி இருந்த நிலையில், தொடர்ச்சியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி சீசன் தொடர்ச்சியாக நீடிக்கிறது. தற்போது வட கிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதால் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இன்று அதிகாலையில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைக் கடந்து தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளை குளிக்க போலீஸார் அனுமதிக்கவில்லை. 

ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் ஆரவாரத்துடன் கொட்டியது. மலைப் பகுதியில் விழுந்து கிடந்த மரங்களை தண்ணீர் வாரிச்சுட்டிக் கொண்டு பேரிரைச்சலுடன் கொட்டியது. அதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர, குண்டாறு அணையின் மேல்பகுதியில் உள்ள நெய்யருவி மற்றும் தனியார் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்கிறார்கள்.   

மெயின் அருவி

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, இன்று காலை 8 மணி வரையிலும் மொத்தம் 768 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 59 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 286 மி.மி மழை பதிவானது. பாபநாசத்தில் 160 மி.மீ மழையும் சேரன்மகாதேவியில் 60 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. செங்கோட்டை பகுதியில் 40 மி.மி மழை பாதிவாகி இருக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.