திடீரென அமைக்கப்பட்ட தீண்டாமை கம்பிவேலி! அதிரடி காட்டிய திருப்பூர் சப்-கலெக்டர் | untouchability Wall Demolition In Tiruppur

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (03/11/2018)

கடைசி தொடர்பு:13:10 (03/11/2018)

திடீரென அமைக்கப்பட்ட தீண்டாமை கம்பிவேலி! அதிரடி காட்டிய திருப்பூர் சப்-கலெக்டர்

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை வேலியை சார் ஆட்சியர் தலைமையிலான குழுவினர் அகற்றிய சம்பவம் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

தீண்டாமை கம்பிவேலியால் பாதிக்கப்பட்டவர்கள்

திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் பிரசித்திபெற்ற முருகன் கோயில் அமைந்திருக்கிறது. அதுபோலவே நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலும் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 15-ம் தேதி, கைலாசநாதர் கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தில் சிலர் இரும்புக் கம்பிவேலியை அமைத்திருந்தார்கள். இது அந்த நிலத்தின் அருகே வசித்துவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது.

பல்லாண்டு காலமாக அம்மக்கள் பொதுவழித்தடமாகப் பயன்படுத்தி வந்த பாதையை கம்பிவேலி அமைத்து அடைக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் பேருந்து நிறுத்தத்துக்கும், கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கும் சுமார் 1 கிலோ மீட்டர் அதிகமாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. பள்ளிக்கூட மாணவர்களும் வெகுவாக சிரமப்பட்டுப் போனார்கள். குறிப்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அந்தக் கோயில் வழியாகச் செல்லக்கூடாது என்ற நோக்கத்துக்காகத்தான் இங்கு கம்பிவேலி அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், எனவே, அந்தத் தீண்டாமை கம்பிவேலியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றுகூறியும், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தார்கள் அப்பகுதி மக்கள்.

ஆனால், அதற்கு அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், அதைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஷரவண்குமார் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர், அலகுமலை கிராமத்துக்குச் சென்று சர்ச்சைக்குள்ளான இரும்புக் கம்பி வேலியை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், சார் ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தத் துவங்கினார்கள். அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.