``ஆம்புலன்ஸ்ல ஏறினப்போ...” - திக் திக் நிமிடங்களை விவரிக்கும் குழந்தையின் தந்தை! | "When we got into ambulance..", the life-saving attempt of a child!

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (03/11/2018)

கடைசி தொடர்பு:12:19 (03/11/2018)

``ஆம்புலன்ஸ்ல ஏறினப்போ...” - திக் திக் நிமிடங்களை விவரிக்கும் குழந்தையின் தந்தை!

` ``நாம நாலு மணி நேரத்துல சென்னை போயிடுவோம் பிரதர்'னு அவர் சொன்னப்போ ஆடிப்போயிட்டேன். கொஞ்ச நேரத்துலயே முன்னாடி ஏழு, எட்டு ஆம்புலன்ஸ் போகுது பின்னாடி ரெண்டு, மூணு வருது. என்ன நடக்குதுன்னு சுதாரிக்கவே முடியல."

``சார், பிரசவம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கான்'னு டாக்டர் சொன்ன அடுத்த நிமிஷம் குலதெய்வத்தைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டேன். சந்தோஷத்துல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற மாதிரியான மனநிலை அது. ஆனா, அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைச்சிருக்கல. திடீர்னு குழந்தைக்கு மூச்சு விடுறதுல சிரமமாகிடுச்சு. என்ன ஆச்சு என்ன நடக்குதுன்னுகூட முழுசா தெரிஞ்சிக்க முடியல. இதோ, இப்போ சென்னையில வந்து நிக்கிறேன். அஞ்சு நாள் கழிச்சு நேத்துதான் என் மனைவிக்கே நான் குழந்தைய தூக்கிட்டு சென்னை வந்திருக்கிற விஷயமே தெரியும்” சோர்ந்த குரலில் பேசுகிறார் குணாளன். சென்னை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் முதல் தளத்தில் நின்றபடியே நம்மிடம் பேசிக்கொண்டிருந்தார். 

குழந்தையை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிகாலையில் திருச்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிசேரியன் மூலமாக குணாளனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே மூச்சுத்திணறல் ஏற்பட அருகிலுள்ள வேறு ஒரு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக குழந்தையை அனுப்பி வைக்கிறார்கள். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மேல் சிகிச்சைக்கு சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றபோதே குணாளனுக்குத் தலை சுற்ற ஆரம்பித்திருக்கிறது.  

``எனக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகுது. இரும்பு டோர், ஜன்னல் செய்யுற வேலை பார்த்துட்டு இருக்கிறேன். எங்க ரெண்டு பேருக்குமே குழந்தை பத்தின கனவுகள் நிறைய இருந்துச்சு. ஆஸ்பத்திரியில குழந்தை பொறந்த ரெண்டு மணி நேரத்துலயே மூச்சு விட சிரமப்படுது. அதனால, உடனே குழந்தைய மட்டும் வேற ஒரு ஆஸ்பத்திரிக்கு ட்ரீட்மென்ட்டுக்கு அழைச்சிட்டுப் போகணும்னு சொன்னாங்க. ஆபரேஷன் முடிஞ்சு கண்ணு முழிக்காத மனைவிய விட்டுட்டு குழந்தையத் தூக்கிட்டுக் கிளம்பிட்டேன். அங்க போய் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, `குழந்தை கொஞ்சம் சீரியஸா இருக்கு, உடனே சென்னைக்கு அழைச்சிட்டுப் போகணும்'னு சொல்லிட்டாங்க. பொறந்த அன்னிக்கே புள்ளைய சென்னை வர கொண்டு போகணுமே. எப்படிக் கொண்டு போகப் போறோம்னு நினைச்சு தவிச்சிட்டு இருந்தேன். அந்த நேரத்துலதான் எல்லா வசதியும் உள்ள ஒரு ஆம்புலன்ஸை மணப்பாறையில இருக்கிற ஒருத்தர் கொண்டு வந்தாரு. சாயந்தரம் நாலு மணி இருக்கும் நாங்க திருச்சியில இருந்து கிளம்பும்போது. ஆம்புலன்ஸ்ல ஏறுறதுக்கு முன்னாடி பச்சக்குழந்தையத் தூக்கிட்டுப் போறோமேனு நினைச்சுப் பதற்றமா இருந்துச்சு. ஆனா, அடுத்தடுத்து என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலை. ஆம்புலன்ஸ்ல ஏறினதும் `நீங்க முன்னாடி டிரைவருக்குப் பக்கத்துல உக்காந்துக்கோங்க. குழந்தைய நான் பார்த்துக்கிறேன்'னு கூட வந்த நர்ஸ் சொன்னதால முன்னாடி வந்து ஏறிக்கிட்டேன். அவ்வளவுதாங்க. வண்டிய ஸ்டார்ட் பண்ணுனதுமே நம்மளைச் சுத்தி ஏதோ பெருசா நடந்துக்கிட்டு இருக்குதுன்னு புரிய ஆரம்பிச்சிடுச்சு. கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு” என்றவர் குரலில் பதற்றமும் படபடப்பும். 

நிச்சயமாக நம் யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு திக் திக் பயணமாகத்தான் அது இருந்திருக்கிறது. ஆம்புலன்ஸின் ஹாரன் ஒலி ஒருபுறம், காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னேறும் வேகம் மற்றொரு புறம், இதற்கிடையில் சீரான சுவாசத்துக்காக வெண்டிலேட்டரில் போராடிக்கொண்டிருக்கும் தன் குழந்தையை ஜன்னல் வழியாகத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்திருக்கிறார் குணாளன். 

விரைந்து வரும் ஆம்புலன்ஸ்

``எனக்கு எப்படிச் சொல்றதுனே தெரியலங்க. இதுக்கு முன்ன பின்ன நான் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரைப் பார்த்ததே கிடையாது. வண்டியில ஏறினதுக்கு அப்புறமாதான் அவர் பேரே அலெக்ஸ்னு தெரிஞ்சிக்கிட்டேன். `நாம நாலு மணி நேரத்துல சென்னை போயிடுவோம் பிரதர்'னு அவர் சொன்னப்போ ஆடிப்போயிட்டேன். கொஞ்ச நேரத்துலயே முன்னாடி ஏழு, எட்டு ஆம்புலன்ஸ் போகுது பின்னாடி ரெண்டு, மூணு வருது. என்ன நடக்குதுன்னு சுதாரிக்கவே முடியல. ஆம்புலன்ஸோட ஹாரன் சத்தத்துல காதுவேற அடைக்கிது. கண்ண மூடி எனக்குத் தெரிஞ்ச சாமி எல்லாத்தையும் கும்பிட்டுக்கிட்டே இருந்தேன். அப்பப்போ எம் பையனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டேன். ஆம்புலன்ஸ் ஓனர் ஸ்ரீதரன் போன்ல யார்ட்டயோ பேசிட்டே வந்தாரு. எத்தனையோ சிக்னல்களையும் ட்ராஃபிக்கையும் தாண்டி சரியா நாலு மணி நேரத்துக்குள்ள சென்னை கொண்டு வந்து சேர்த்துட்டாங்க. சென்னையில எவ்வளவு ட்ராஃபிக் இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், ஆம்புலன்ஸ்க்காக வழி விட்டு நின்ன எல்லா மக்களுக்கும் நான் நன்றியைச் சொல்லிக்கிறேன்” என்று கை கூப்பி நின்றவரிடம் அவர் மனைவி பற்றி விசாரித்தோம். 

``ஒரு வாரமா அவங்ககிட்ட குழந்தை பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில இருக்குன்னுதான் சொல்லிட்டு இருந்தோம். அப்போக்கூட `திருச்சி ஆஸ்பத்திரியிலதானே இருக்கீங்க. நீங்களாவது வந்து என்னைப் பார்த்துட்டுப் போங்க'ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நேத்து அவங்களோட சிஸ்டர் மூலமா தகவலைச் சொல்ல வெச்சோம். கேள்விப்பட்டதுமே ரொம்ப துடிச்சுப் போயிட்டாங்க. போன் பண்ணி அழுதாங்க. அவனுக்கு என்ன பேரு வைக்கலாம்னுகூட யோசிச்சு வெச்சிருக்காங்க. ஆனாலும், குழந்தை பிறந்ததுல இருந்து அவனோட முகத்தைக்கூட அவங்க பார்க்கல. நானே இங்க ஆஸ்பத்திரி வாசல்ல படுத்துத் தூங்கிட்டு இருக்கிறேன். இதுல அவங்களும் வந்தா சிரமம்தானே. அதான் டாக்டர் சொன்னதுக்கு அப்புறமா அழைச்சிட்டு வரலாம்னு இருக்கிறேன்” என்று பேசிக்கொண்டே இருந்தவரை `திருச்சியில இருந்து வந்திருக்கிற குணாளன் யாருங்க. உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க' என்று அழைத்ததுமே ``சரிங்க பிரதர் நாம அப்புறமா பேசலாம்” என்றபடியே உள்ளே ஓடுகிறார். 

திருச்சி முதல் சென்னை வரை அதிவேகமாக விரைந்து வந்த அந்த ஆம்புலன்ஸ்களைக் கண்டு பொதுமக்களில் சிலர் அதிர்ந்து போயிருக்கலாம். ஆம்புலன்ஸில் செல்லும் அந்த ஜீவனைப் பற்றிய விவரம் ஏதும் தெரியாமலேயே சிலர் மனமுருகிப் பிரார்த்தனை செய்திருக்கலாம். உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் வீண் போகாது. நிச்சயமாக தன் மகனைக் காண ஆவலோடு காத்திருக்கும் அந்தப் பெற்றோர்களின் கைகளில் குழந்தை பத்திரமாக வந்து சேரும். ஆசை மகனின் முகம் கண்டு அவர்கள் உள்ளம் குளிரும். 


டிரெண்டிங் @ விகடன்