வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (03/11/2018)

ME TOO ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கல்வி வளர்ச்சி நிதி சேகரிக்கும் அரசுப் பள்ளி!

சமூக வலைதளங்களில், 'அடுத்த பஞ்சாயத்தில் சிக்கப்போவது எந்த வி.ஐ.பி.யோ' என்று என்று எல்லோரும் உற்றுநோக்கும் அளவுக்கு வைரலாகி வரும் ஹேஷ்டேக் ME TOO. ஆனால், அந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் தங்கள் பள்ளிக்கு கல்வி வளர்ச்சி சம்பந்தமான நன்கொடை வாங்கி அசத்தி வருகிறது கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி.

ME TOO ஹேஷ்டேக்வுடன் பள்ளி மாணவர்கள்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கிறது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் உந்துதலோடுதான் இங்கு பணிபுரியும் மனோகரன் என்ற இடைநிலை ஆசிரியர் இந்த வைரல் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பள்ளிக்குத் தேவையான நிதியை பொதுமக்களிடம் சேகரித்து வருகிறார். தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த சாதிக் அலி என்பவர் இந்தப் பள்ளி கல்வி வளர்ச்சி நிதிக்காக ரூ.5000 தர, அதற்காக இந்தப் பள்ளி மாணவி ஒருவர் ME TOO என்ற ஹேஷ்டேக் வாசகத்தைக் கொண்ட அட்டையை ராக்கி  போல அவரின் இடது கையில் கட்டிவிட்டார். அதோடு, நன்கொடை கொடுத்த சாதிக் அலி சம்பந்தமான தகவல்களை இரண்டு படிவங்களில் எழுத வைத்து, ஒன்றை பள்ளியில் வைத்துக்கொண்டு, மற்றொன்றை சாதிக் அலியிடம் கொடுத்தார்கள். அதோடு, கல்வி வளர்ச்சி நிதி கொடுத்த அந்த இளைஞருக்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தார்கள். ஆசிரியர் மனோகரன்

இதுசம்பந்தமாக, இடைநிலை ஆசிரியர் மனோகரனிடம் பேசினோம். ``தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளியை திறம்பட நடத்த ஊக்கப்படுத்துகிறார். இயற்கை விவசாயம், சுத்தமான குடிநீர், காற்றோட்டமான வகுப்பறைகள் என்று பள்ளியை மேம்படுத்தி இருக்கிறோம். அதோடு, ஒவ்வொரு மாணவருக்கும் கியூ.ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டையைக் கொடுத்துள்ளோம். அதை ஆண்ட்ராய்டு மொபைலில் ஓப்பன் செய்தால், மாணவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வரும். இது நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடம் நடத்த தொடுதிரைகள் வாங்க முடிவு பண்ணினோம்.

இதற்கிடையில், மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தமிழக அரசோடு இணைந்து தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி கொடுத்தாங்க. அதாவது, கல்வியை டிஜிட்டல் முறையில் நடத்துவது சம்பந்தமான பயிற்சி அது. அதோடு, கல்வியை மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளையே எப்படி மேம்படுத்துவது, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட கிராம, நகர மக்களை எப்படி இணைய வைப்பதுன்னு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. அதன்படிதான், எங்க பள்ளி வளர்ச்சிக்காக வெள்ளியணை கிராம மக்களிடம் நிதி வசூல் பண்ணினோம். இதுவரை 34,000 ரூபாய் கிடைச்சுருக்கு. இந்நிலையின்தான், சமூக வலைதளங்களில் ME TOO என்ற ஹேஷ்டேக் சமீபத்தில் பிரபலமடைந்தது. அந்த வார்த்தையை எங்க பள்ளி வளர்ச்சிக்காக நிதி வசூல் பண்ண பயன்படுத்த நினைத்தோம்.

வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

அதாவது, பள்ளி வளர்ச்சி நிதிக்கு பணம் தருபவர்கள், 'நானும்கூட நம் பள்ளிக்காக நன்கொடை அளிக்கிறேன்' என்று சொல்லி, அந்த ஹேஷ்டேக் வார்த்தைக்கான அர்த்தத்துடன் தருவதுபோல் செய்ய நினைத்தோம். கூடுதல் கவனம் பெறும்ங்கிறதுக்காகதான் இந்த ஐடியா. இதற்காக, நிதி கொடுப்பவர்களுக்கு மாணவர்களே அவர்களின் கைகளில் ME TOO வாசகம் அடங்கிய பட்டையான அட்டையை கட்டிவிடும் வகையில் நூற்றுக்கணக்கான அட்டைகளை அச்சடித்து வைத்துள்ளோம். அதைப்பற்றி நோட்டீஸ்களாக அச்சடித்து வைத்துள்ளோம். இந்த ஐடியா பலன் தர ஆரம்பித்திருக்கிறது. பலரும் இந்த ஐடியாவுக்காகவே கல்வி வளர்ச்சி நிதி தர முன்வந்திருக்கிறார்கள்" என்றார் மகிழ்ச்சியாக!