வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (03/11/2018)

கடைசி தொடர்பு:15:12 (03/11/2018)

ஆட்சியைத் தக்கவைக்கணும்னா... முதல்வர் பேச்சால் `ஷாக்'கான 20 பொறுப்பாளர்கள்

காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு அ.தி.மு.க சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடியும்" என்று ஷாக் கொடுத்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி

டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த 18 பேருடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். இதில், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்றும் இடைத்தேர்தலைச் சந்திப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பில் அ.ம.மு.க-வினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே, காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்தனர் முதல்வரும், துணை முதல்வரும். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 20 தொகுதி அ.தி.மு.க பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ``எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிவெற வேண்டும் என்ற முனைப்பில் அ.தி.மு.க-வினர் தேர்தல் பணியாற்றுங்கள்" என்று கூறினார். முதல்வரின் இந்தப் பேச்சு 20 பொறுப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது, அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக 116 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இதில், அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். கருணாஸ், அன்சாரி நிலைப்பாடுகளும் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை. தனியரசு மட்டும், எடப்பாடி பழனிசாமி பக்கம் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆறு பேரைக் கணக்கிட்டால், 110 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 118 பேர் வேண்டும். இதை வைத்தே, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இன்னும் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றாகணும் என்று முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார். 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.