வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:16:11 (03/11/2018)

அரசுப் பேருந்தில் புகுந்த விஷப் பாம்பு! அலறியடித்து ஓடிய பயணிகள்

நெல்லையில் அரசுப் பேருந்தில் பயணிகளுடன் பாம்பு பயணம் செய்ததை பாதிவழியில் மக்கள் கண்டுபிடித்ததால் அலறியடித்து பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடினார்கள். பின்னர் பஸ்ஸில் பயணித்த பாம்பு நடுவழியில் காட்டுக்குள் இறக்கி விடப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். 

பஸ்ஸில் பயணித்த பாம்பு

தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை விடப்பட்டு இருப்பதால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. சொந்த ஊருக்குச் செல்வதற்காகவும், தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசு வாங்குவதற்காகவும் மக்கள் அதிகமாகப் பயணம் செய்து வருகிறார்கள். அதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்தக் கூட்ட நெரிசல் நேரத்தில் `டிக்கெட் எடுக்காமலே’ பாம்பு ஒன்று அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளது.

நெல்லையிலிருந்து தென்காசி சென்ற அரசுப் பேருந்தில்தான் அந்தப் பாம்பு பயணம் செய்துள்ளது. அதிக கூட்டத்துடன் அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பயணியின் காலுக்குள் ஏதோ நெளிவதுபோல உணர்ந்துள்ளார். அதனால் காலுக்குள் என்ன கிடக்கிறது எனப் பார்த்தபோது அவரது காலுக்கு அருகில் நீளமான பாம்பு ஒன்று நகர்ந்து சென்றுள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ’பாம்பு... பாம்பு’ என அலறி இருக்கிறார். அதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கதறியதால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார். பேருந்தின் நடத்துநர் அச்சத்தின் காரணமாக பஸ்ஸில் இருந்து குதித்து ஓட்டம் பிடித்த நிலையில், பயணிகள் சிலர் துணிச்சலுடன் அந்தப் பாம்பைப் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டார்கள். அதன் பின்னரே, பஸ்ஸில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நிம்மதி அடைந்து தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டனர். ``விஷப்பாம்பிடம் இருந்து தப்பித்தது அதிசயம்தான்'' என்று பயணிகள் பெருமூச்சு விட்டனர்.

பாம்பை பேருந்தில் இருந்து வெளியே தூக்கிப்போட்ட பயணி

அரசுப் பேருந்தில் அழையா விருந்தாளியாக பாம்பு பயணம் செய்ததையும் அதைச் சிலர் துணிச்சலாகப் பிடித்து கீழே விடுவதையும் பயணி ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அது தற்போது நெல்லை மாவட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் வைரலாகப் பரவிவருகிறது.