திருப்பூரில் தீண்டாமை வேலி அமைத்த ஆதிக்க சாதியினர்; அவஸ்தைப்படும் மக்கள்...! | Untouchability issue at a village in Tirupur district

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (03/11/2018)

கடைசி தொடர்பு:18:05 (03/11/2018)

திருப்பூரில் தீண்டாமை வேலி அமைத்த ஆதிக்க சாதியினர்; அவஸ்தைப்படும் மக்கள்...!

திருப்பூர் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆதிக்க சாதியினர் கம்பிவேலி அமைத்து மூடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் தீண்டாமை வேலி அமைத்த ஆதிக்க சாதியினர்; அவஸ்தைப்படும் மக்கள்...!

திருப்பூரை அடுத்துள்ள அலகுமலை கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை வேலி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கிராமத்தில் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த பொது சாலையை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் திடீரென்று அடைத்ததுடன், தாழ்த்தப்பட்டோர் சென்று வராமல் தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைத்துவிட்டனர். 

அந்தச் சாலை அமைந்துள்ள நிலப்பகுதி அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறி ஆதிக்கசாதியினர் அங்கு இரும்புக் கம்பிவேலி சமீபத்தில் அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள். ஆனால் அது அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் அல்ல என்றும், அரசின் நத்தம் புறம்போக்கு பகுதிதான் என்றும் கூறுகிறார்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள்.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஈஸ்வரன் கோயில் வழியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துக்காகவே ஆதிக்கசாதியினர் இதுபோன்று கம்பிவேலியை அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். 

தீண்டாமை வேலி - யேசுதாஸ்

``எங்கள் ஊரில் அனைத்து சாதி மக்களும், எங்களுக்குள் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனால் ஆதிக்கசாதியைச் சேர்ந்த ஒருசிலர் பண்ணும் சூழ்ச்சிகளால்தான் எங்களுக்குள் முட்டலும், மோதலும் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கு. இங்குள்ள கோயிலுக்கும், பள்ளிக்கூடத்துக்கும் அந்த வழியாகத்தான் சென்று வந்தோம், மேலும் பேருந்து நிறுத்தத்திற்கும் செல்வதற்கு இந்தச் சாலையைத்தான் நாங்கள் அனைவரும் பயன்படுத்தி வந்தோம். இத்தனை ஆண்டுகாலமாகப் பயன்படுத்திட்டு வந்தோம். ஆனால், எங்க ஆளுங்க இந்தப் பக்கமே வரக்கூடாதுன்னு யோசிச்சு இப்படியொரு காரியத்தைப் பண்ணியிருக்காங்க.

பள்ளிக்கூடம் லீவு விட்டா எங்க வீட்டுப் பிள்ளைங்க எல்லாம் இந்தக் கோயில் பகுதியில்தான் விளையாடுவாங்க. தினமும் இந்தப் பாதை வழியாகத்தான் கிணற்றுக்குப் போய் வீட்டுக்குத் தேவையான மொத்த தண்ணீரையும் கொண்டு வருவோம். இத்தனை வருஷமா எந்தச் சச்சரவும் இல்லாமல் நாங்க பயன்படுத்திட்டு இருந்த பாதையை, திடீர்னு மூடிவிட்டு, எங்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பது நியாயம்தானா? ஏன் கம்பிவேலி போடுறீங்கன்னு ஆரம்பத்தில் நாங்க போய் கேட்டதுக்கு, `இந்தக் கோயிலுக்குச் சொந்தமான தேர் பாதுகாப்பா இருக்கணும். யார் யாரோ குடிகாரப் பசங்க எல்லாம் மதுபோதையில் இங்க வந்து படுத்துடுறாங்க. அதனாலதான் பாதுகாப்புக்காகக் கம்பிவேலி போடுறோம்னு' பதில் வந்தது. ஆனால் தேர் இருக்குற இடத்துக்கும், கம்பிவேலி போடும் அளவையும் பார்த்த உடனேயே எங்களுக்குச் சந்தேகம் வந்திருச்சு.

`எங்க சனத்துக்கு எல்லாம் பெரிய சிரமமாப் போயிடும். கம்பிவேலி எல்லாம் போடாதீங்கன்னு' நாங்க எல்லோருமாகப் போய் கோரிக்கை வெச்சோம். ஆனால் அதைக் காதுகொடுத்தே கேட்காமல், போலீஸ்காரர்களை வைத்து மிரட்டியதுடன் எங்களை துரத்தியடிச்சிட்டாங்க. நாங்களும் மனுஷங்கதானே சார்!" எனப் பரிதாபத்துடன் தங்களின் பிரச்னையை விவரித்தார்  இந்தப் பகுதியில் வசிக்கும் தையற்தொழிலாளியான யேசுதாஸ்.

தீண்டாமை வேலி - சித்ரா

"நீங்க யாரும் இந்தப் பக்கமே வரக்கூடாது. அப்படி வந்தா, கம்பிவேலியில் மின்சாரம் வெச்சிடுவோம்னு பயமுறுத்துறாங்க. எங்க புள்ளைங்க தினமும் கம்பிவேலியைச் சுற்றித்தான் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டியதாயிற்று. இதனால், அதிக தொலைவு சென்று வர குழந்தைங்க எல்லாம் அத்தனை கஷ்டப்படுதுங்க சார். இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுங்கன்னு அதிகாரிகள்  பலபேர்கிட்டப் போய் மனு கொடுத்தும் பார்த்துட்டோம். ஆனால் இப்போ வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. யாரும் காது கொடுத்தும் கேட்கறதா இல்லை. அரசியல் பலமும், ஆதிக்கசாதிங்கிற அடையாளமும் இருப்பதால்  அதிகாரிகள் எல்லாம் அவங்க சொல்வதைத்தான் கேட்கிறாங்க. எங்களோட கோரிக்கைகள் எல்லாம் எடுபடாம போயிடுது. அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுத்தா அதுவே எங்களுக்குப் பெரிய உதவியா இருக்கும்!" எனக் கேட்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்மணி. 

தீண்டாமை வேலியைத் தகர்த்தெறிய வேண்டியது அரசின் கடமை. அப்போதுதான், இது ஜனநாயக நாடு என்பதை நிரூபிக்க முடியும்...அரசும், அதிகாரிகளும் செய்வார்களா...?


டிரெண்டிங் @ விகடன்