வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (03/11/2018)

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண தபசுக் காட்சி!

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெற்றுவரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தபசுக் காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

நெல்லையப்பர் கோயில்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும் நெல்லையின் அடையாளமுமான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா, 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நாள்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

இந்த விழாவின் 11-ம் நாளான இன்று தபசுக் காட்சி நடைபெற்றது. இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு டவுண் காட்சிமண்டபத்தில் எழுந்தருளினார் அதைத் தொடர்ந்து நண்பகலில் நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி அளித்தார். பின்னர், நெல்லையப்பரும் அம்பாளும் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, 

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா நாளை (4.11.2018) காந்திமதி அம்பாள் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.