வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:20:53 (03/11/2018)

போலி ஆவணங்களைத் தயாரித்து வீட்டுமனை விற்பனை - கோவை தி.மு.க பிரமுகர் கைது!

போலி ஆவணங்களைத் தயாரித்து, வீட்டு மனைகளை விற்ற குற்றத்துக்காக, கோவையில் தி.மு.க பிரமுகர் மருதமலை சேனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேனாதிபதி

கோவை, தொண்டாமுத்தூர் தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருப்பவர் மருதமலை சேனாதிபதி. ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாமா கோபிநாத் என்பவர், சேனாதிபதி மற்றும் வீரகேரளத்தைச் சேர்ந்த இருவரிடம் சோமையம்பாளையம் ஊராட்சியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதே பூமியை, வீட்டு மனைகள் கட்டி விற்பதற்காக நேருநகர் என்ற பெயரில் 23 வீட்டு மனைகளாகப் பிரித்து, அதில் 10 வீட்டு மனைகளை விற்றிருக்கிறார் சேனாதிபதி.

சேனாதிபதி

குறிப்பாக, வரன்முறை படுத்தப்படாமல் இருந்ததை, வரன்முறை படுத்தப்பட்டதாக (DTCP) போலி ஆவணங்களைத் தயாரித்து, போலி முத்திரைகளையும் பயன்படுத்தி, அதில் வட்டார வளர்ச்சி அலுவலரின் கையொப்பத்தையும் போலியாக உருவாக்கி, வீடு கட்டி விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, போலி ஆவணங்களைத் தயாரித்து, வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக சேனாதிபதி மேல் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் கோவை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் சேனாதிபதியைக் கைது செய்தனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி பாலமுருகன், வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனவும், வழக்கு விசாரணைக்கு தேவைபடும் போது  ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் தி.மு.க ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை விடுதலை செய்து உத்தரவிட்டார்.