பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம் | Pachayaru check dam washed away in water

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (03/11/2018)

பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்

நெல்லையில் பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பச்சையாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள கடைசித் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆற்றின் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் 3,000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

பச்சையாறு தடுப்பணை உடைப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பச்சையாறு நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இந்த ஆறு நெல்லை அருகே தருவை மற்றும் தமிழாக்குறிச்சி வழியாகச் சென்று தாமிரபரணி ஆற்றில் இணைகிறது. இந்த நிலையில், தருவை, தமிழாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆற்றின் மூலம் 3,000 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வருகிறது. 

அதனால் பச்சையாற்றில் கடைசியாக அந்த இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட அந்த அணையின் மூலமாக 36 குளங்கள் நிறைவதுடன், விவசாயத்துக்கும் குடிநீர் ஆதாரத்துக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை முற்றிலுமாக உடைந்து தண்ணீர் வெளியேறிவருகிறது. தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வீணாகக் கடலுக்குச் செல்கிறது. இந்தத் தடுப்பணைக்கு முன்பாக சிங்கிகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,``பச்சையாறு தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மழை நேரத்தில் தேங்க வேண்டிய தண்ணீர் வீணாகச் செல்கிறது. இந்தத் தடுப்பணையை நம்பி 36 குளங்கள் உள்ளன. அந்தக் குளங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 3,000 ஏக்கர் விவசாய நிலத்தின் நிலைமையும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் தடுப்பணையின் உடைப்பை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.