``நிர்மலா சீதாராமனின் கருத்து வருத்தமளிக்கிறது" - தம்பிதுரை அதிருப்தி | Thambidurai slams Minister Nirmala Sitharaman

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (03/11/2018)

``நிர்மலா சீதாராமனின் கருத்து வருத்தமளிக்கிறது" - தம்பிதுரை அதிருப்தி

மத்திய அரசுதான் அனைத்துத் திட்டங்களையும் செய்வதுபோல, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது வருத்தமளிக்கிறது என்று தம்பிதுரை கூறியுள்ளார்.

தம்பிதுரை

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “திட்டங்கள் செயல்படுத்துவது மாநில அரசுகள்தான். மாநில அரசுக்குத்தான் அதற்கான அதிகாரமும் உள்ளது. தமிழகத்தில் இருந்துதான் அதிக வரிப்பணம் மத்திய அரசுக்குச் செல்கிறது. எனவே, தமிழக திட்டங்களுக்கான பணத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் .

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களைத் தத்தெடுத்தல் திட்டத்துக்கு, மத்திய அரசு இதுவரை பணம் ஒதுக்கவில்லை. அதற்காக நாடாளுமன்ற நிதியைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், ஓராண்டுக்கு 5 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. பல முறை கேட்டும் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட கிராமத்தைத் தத்தெடுப்பு என்பது நியாயமில்லை. அது முடியாத காரியம். இதனால், மற்ற கிராம மக்களிடையே எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். அனைத்து கிராமங்களையும் தத்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லையெனில் தர்ம சங்கடம் ஏற்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனால் வருத்தத்தில் உள்ளனர்.

இதற்காகவே, எம்.பி நிதியை ரூ.5 கோடியிலிருந்து, ரூ.25 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், அதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசுதான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவது போலவும், மாநில அரசு எதுவும் செய்யவில்லை என்பது போன்ற கற்பனையான கருத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது வருந்தத்தக்கது” என்றார்.