வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:18:33 (03/11/2018)

மூன்று நாள்களில் 31 மான்கள் பலி! - திருச்சி பெல் வளாக அதிர்ச்சி

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவன வளாகத்தில் கடந்த 3 நாள்களில் 30க்கும் மேற்பட்ட மான்கள் அடுத்தடுத்து மர்ம முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்கள்
 
திருச்சி திருவெறும்பூர் பகுதியிலுள்ள பெல் நிறுவன குடியிருப்புப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் புத்தாயிரம் பூங்கா எனும் பெயரில் வனப்பகுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மான்கள் பராமரிக்கப்படுகின்றன. அப்பகுதியில் காணப்படும் மான்களைப் பார்க்கவே ஏராளமான பார்வையாளர்கள் குழந்தைகளுடன் அப்பகுதியில் வலம் வருவது உண்டு.  
அவற்றில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மான்கள் கடந்த மூன்று நாள்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மயங்கிவிழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மான்களுக்கு அதிக கொழுப்புள்ள உணவுகள் தரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இவ்வளவு அதிகமான மான்கள் இறந்தது குறித்து வனத்துறை மற்றும் கால்நடைத்துறை, பில் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்த மான்களின் உடல்களை மீட்டுப் பரிசோதனை செய்ததுடன், மான்கள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பேசிய மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா, ``கடந்த 3 நாள்களில் 6 - பெண், 25 - ஆண் மான்கள் என 31 மான்கள் இறந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த மான்கள் சுபா எனப்படும் ஒரு வகையிலான புற்களை உண்டதால் மரணம் அடைந்துள்ளது. மீதமுள்ள மான்களைப் பாதுகாக்க கீரை, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். 
 
சமீபகாலமாக கால்நடைகளுக்குத் தீவனங்களில் சுபா புல் எனப்படும் ஒரு முறையான தழைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அப்படியான சுபா புல்லை சில விதிமுறைகளுடன் உயிரினங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக 10 பங்கு சுபா புல்லையும், இரண்டு பங்கு பசும்புல்லையும் தீவனமாகக் கொடுக்க வேண்டும். சுபா புல்லை மட்டும் தனியாக மான் உள்ளிட்ட உயிரினங்களுக்குக் கொடுத்தால், உடல் உபாதைகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அப்படியான பாதிப்புகளில் உயிர் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது. இந்தச் சம்பவத்தைப் போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாய்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்தன. இதனால், மான்கள் இறந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் இறந்த மான்களின் முழுமையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் எனவும் திருச்சி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்த தினங்களில் மான்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவதும், மீதம் இருக்கும் மான்களைக் காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதும், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க