வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:23:30 (03/11/2018)

கைதிகள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர் - ஐகோர்டில் அறிக்கை தாக்கல்!

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்


சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மாநில அரசுகளுக்குத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சிறையில் கைதிகள் மரணம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிறைகளில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் வைகை நியமித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில், மூத்த வழக்கறிஞர் வைகை, வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் ஆய்வு நடத்தி ஆரம்பகட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், ``சிறை மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ வசதிகள் மட்டுமே  இருப்பதால், நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்குக் கைதிகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள கைதிகள் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.  

கைதி

 அதற்கு வாரத்தில் இரு நாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  போதுமான பாதுகாப்பு வசதிகளைக் காவல்துறை செய்து தராததால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.  இந்த நடைமுறை சிக்கல்களை களைந்தால் சிறைக்கைதிகளின் மரணத்தைத் தவிர்க்க முடியும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  ``சிறையில் குடிநீர் வசதி, சுகாதார வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பெண்களுக்குத் தேவையான உடைகள் மருந்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மனித உரிமை ஆணைய உத்தரவுப்படி, மனநலம் பாதித்தவர்களை  சிறையில் வைத்திருக்கக் கூடாது. ஆனால் சிறைகளில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல வயோதிகம் காரணமாக ஏராளமான கைதிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூடியே விடுதலை செய்வது குறித்தும், மனநலம் பாதித்தவர்களை சிறையிலிருந்து மனநல மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வது குறித்தும் அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட  வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது அறையில் விளக்கு வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை  பரிசீலிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகள், தங்கள்  குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு தொலைப்பேசியில் பேசுவதற்கு  வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் அந்த ஆரம்ப கட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தபோது, அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அறிக்கை மீது அரசு எடுத்த  நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.