வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (03/11/2018)

கடைசி தொடர்பு:21:45 (03/11/2018)

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள்! - சிறப்புப் பேருந்துகளில் அலைமோதும் கூட்டம்

தீபாவளியை முன்னிட்டு பேருந்துநிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அசாம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேருந்துகள்


தீபாவளிப்பண்டியையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். 6-ம் தேதி தீபாவளி பண்டி கொண்டாடப்பட உள்ள நிலையில், 5-ம் தேதியையும் அரசு விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையின் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து அனைத்து ஊர்களுக்கும் 21 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 11 ஆயிரத்து 367 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று 477 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 2 ஆயிரத்து 931 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இதில் 14 ஆயிரத்து 127 பேர்  முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

பொதுமக்கள்

இந்நிலையில் இன்று 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கெனவே 430 எஸ்.இ.டி.சி பேருந்துகள் உட்பட 821 பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டது. கோயம்பேடு, கே.கே.நகர், பூவிருந்தவல்லி, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையம், மெப்ஸ் என மொத்தம் 6 இடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் தனித்தனியாக  26 முன்பதிவு மையங்களும், 2 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 9 நடைமேடைகளில் 3,4,5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் 1,2,7,8 மற்றும் 9 ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளும் நிற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை


 அதுமட்டுமல்லாமல் எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த நடைமேடைகளில் இருந்து இயங்கும் என்ற விவரங்களை ஒலிபெருக்கி மூலமாக  அறிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் ஆறிவிப்பு பலகைகள் பேருந்து நிலையம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.  கோயம்பேடு பேருந்து நிலையத்தைச் சுற்றியும், பயணிகளின் பாதுகாப்பிற்காக 3 துணை ஆணையர்கள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இனி வரும் இரண்டு நாட்களுக்குள் முன்பதிவு  அதிகரிக்கும் எனவும், அதிகபட்சம் 5 லட்சம் பேர் பயணம் மேற்கொள்வார்கள் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆம்னி பேருந்துகள் இந்த சந்தர்பந்தை பயன்படுத்தி, பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.