வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:00:30 (04/11/2018)

சித்திர ஆட்ட திருநாளுக்காக சபரிமலை நடை திறப்பு -மீண்டும் 144 தடை உத்தரவு

சித்திர ஆட்டதிருநாளுக்காக வரும் 5-ம் தேதி சபரிமலை நடை திறப்பதை முன்னிட்டு 2,300 காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை

சபரிமலை அய்யப்ப சுவாமி கோயில் சித்திர ஆட்டத் திருநாள் பூஜைக்காக வரும் 5 -ம் தேதி மாலை நடை திறக்கிறது. 6-ம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மாதாந்திர பூஜைக்காக கடந்த மாதம் 17 -ம் தேதி முதல் 5 நாட்கள் அய்யப்பன் கோயில் நடை திறந்திருந்தது. அப்போது சன்னிதானம் செல்லமுயன்ற பெண்களை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தடுத்தனர். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3,701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சித்திர ஆட்ட திருநாள் பூஜைக்காக வரும் 5-ம் தேதி நடை திறப்பதால் பக்தர்கள் போன்று இந்து அமைப்பினர் சபரிமலைக்கு சென்றுவிடக்கூடாது என்ற முனைப்போடு காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் வரும் செவ்வாய் கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி. அனில்காந்த் தலைமையில் 20 கமாண்டோ காவலர்கள், 100 பெண் காவலர்கள் உள்பட 2,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் பத்தணம்திட்டா பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.