வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:06:30 (04/11/2018)

``சீராய்வு மனு விசாரணைக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை” -பந்தளம் மன்னர் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது கட்டுப்பாடு இன்றி பெண்களை அனுமதிப்பது தொடர்பான் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவினை தொடர்ந்து எங்கள் நடவடிக்கை இருக்கும். அதற்கு இடையே சொல்வதற்கு ஏதும் இல்லை என பந்தளம் மன்னர்  மகம் திருநாள் கேரள வர்மராஜா தெரிவித்தார்.

ஐயப்ப பக்தர்கள் பேரணியை துவக்கி வைத்த பந்தளம் மன்னர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது கட்டுப்பாடு இன்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் போராட்டக்காரர்களால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். கேரள அரசும், தேவசம் போர்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆனால் ஐயப்பன் கோயிலில் பூஜை செய்யும் தந்திரிகள், பந்தள மன்னர் குடும்பத்தினர் மற்றும் இந்து அமைப்புகள் இதற்கு எதிராக உள்ளனர்.

பந்தளம் மன்னர துவக்கி வைத்த ஐயப்ப பக்தர்கள் பேரணி

 மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மறு பரிசலினை செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இம்மாதம் 11-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பேரணி நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இன்று இந்த பேரணி நடந்தது. பேரணிக்குத் தலைமை வகித்த பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்மராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஆசார அனுஷ்டாரங்களின் படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பெண்களின் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு பல ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு மாறாக அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கத் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு ஏற்க மறுத்து பந்தளத்தில் பெரும் பேரணி நடந்தது. இதில் அதிகளவு பெண்களே பங்கேற்றனர். சபரிமலைக்குச் செல்ல பெண்களே விரும்பவில்லை என்பதைதான் இது காட்டுகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை சீராய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படும் வரை போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை இந்த விசயத்தில் எதுவும் சொல்வதற்கு இல்லை. என்றாலும் சபரிமலையின் ஆசாரங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் விதமாக டெல்லி ஜந்தர்மந்தர் துவங்கி அனைத்து பகுதிகளிலும் பேரணி நடந்து வருகிறது. அதனடிப்படையிலேயே ராமேஸ்வரத்தில் நடந்த பேரணியில் பங்கேற்று உள்ளேன்” என்றார்.

முன்னதாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் துவங்கிய ஐயப்ப பக்தர்களின் பேரணி முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற பெண்கள் உரிய வயது வரும் வரை சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஐயப்ப பக்தர்கள், பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.