வெளியிடப்பட்ட நேரம்: 02:35 (04/11/2018)

கடைசி தொடர்பு:02:38 (04/11/2018)

ஓட்டுநர்களுடன் செல்ஃபி... பயணிகளுக்குத் தீபாவளி வாழ்த்து... கோயம்பேட்டில் அசத்திய அமைச்சர்

கோயம்பேடு

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. தீபாவளிக்கு முன்தின நாளும் தமிழக அரசு விடுமுறை அறிவிக்கச் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். நேற்று சனிக்கிழமை என்பதால், அதிகப்படியான மக்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர்
 

ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டதால், சென்னையின் பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாகச் சென்னை கோயம்பேடு பகுதிக்கு மக்கள் பெருமளவில் படையெடுத்தனர். இதனால் பேருந்துகள் கோயம்பேடு பகுதியை கடக்கவே அதிக நேரம் ஆனது. 

ஓட்டுநர்களுடன் அமைச்சர்

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். முன்பதிவு மையங்களில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இதுவரை சிறப்பு பேருந்துகள் மூலம் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். நாங்கள் சுமார் 6 லட்சம் மக்கள், பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை மக்கள் 4 தினங்களாக பயணம் செய்வதால், கடந்த ஆண்டுகளைவிட நெருக்கடி சற்று குறைவாகவுள்ளது. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம். சென்னை முதல் திருச்சி வரையிலான டோல்கேட்களில் பேருந்துகளுக்கு என்று தனியாக வரிசை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

செல்ஃபி

அதன்பின்னர் அவர் ஒவ்வொரு பேருந்தாகச் சென்று ஆய்வு நடத்தினார். ஓட்டுநர்களுடன் உரையாடிய அவர், எந்த வேகத்தில் பேருந்தை இயக்குவீர்கள், உணவுக்கு எங்கு நிறுத்தப்படும் போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டார்.  மேலும் கவனமுடனும் பாதுகாப்புடனும் வாகனத்தை ஓட்டும் படியும் கேட்டுக்கொண்டார். அப்போது சில ஓட்டுநர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.  

ஆய்வு

பின்னர் பேருந்துகளுக்குள் சென்ற அமைச்சர் பயணிகளிடம் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அவர் பயணிகளுக்கு தீபாவளி வாழ்த்தும் தெரிவித்தார். அதேபோன்று, முன்பதிவு மையத்தின் அருகில் இருந்த அதிகாரிகள் முன்னால் ஃபார்ம் இல்லாததைக் கவனித்த அமைச்சர், ஃபார்ம் இல்லாமல் நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள் எனக் கண்டிப்புடன் கேட்டார். ஃபார்ம்கள் தீர்ந்துவிட்டதாகவும்,. எடுக்க ஆள்கள் சென்றிருப்பதாகவும் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த ஆய்வு காரணமாக அதிகாரிகள் பரபரப்புடன் காணப்பட்டனர்.