வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (04/11/2018)

கடைசி தொடர்பு:09:02 (04/11/2018)

‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம்

 ராமநாதபுரம் அருகே உள்ள உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அபாய மணி ஒலித்ததால் காவலாளியை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்.

கொள்ளை முயற்சி

ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில். சிவன் கோயிலான இங்கு விலை மதிப்பிட முடியாத பச்சை மரகதகல்லினால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்டது இந்த மரகதசிலை. ஆண்டு முழுவதும் சந்தன பூச்சுடன் காணப்படும் இந்த சிலையானது ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் மட்டும் சந்தனப்பூச்சு கலையப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும்.

மரகத நடராஜர் சிலை
இந்நிலையில் நேற்று இரவு இந்த கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கோயில் காவலாளி செல்லமுத்து உள்ளிட்ட 3 காவலாளிகளும் நேற்று இரவு அம்மன் சன்னிதி, சாமி சன்னிதி, நடராஜர் சன்னிதி ஆகிய பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். காவலாளி செல்லமுத்து நடராஜர் சன்னிதியில் ரோந்து சென்ற போது அங்கே இருந்த உண்டியல் அருகே மறைந்திருந்த இருவரைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். அவர்களை விசாரிக்க முயன்ற நிலையில் அந்த இருவரும் செல்லமுத்துவை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இடையே செல்லமுத்து உண்டியலைத் தொட்டு அபாய ஒலியினை ஒலிக்கச் செய்துள்ளார். இதனால் ஊர்மக்கள் கோயிலுக்குள் திரள தொடங்கினர்.  இதனை அறிந்த கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.தாக்குதலில் காயமடைந்த காவலாளி செல்லமுத்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயில்  பாதுகாப்பிற்காக உண்டியல், மதில் சுவர் என பல்வேறு பகுதிகளில் அவற்றைத் தொட்டால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு பூஜை முடிந்து பூட்டப்பட்ட கோயிலுக்குள் கொள்ளையர்கள் எப்படி புகுந்தனர் என்பது புதிராக உள்ளது. இது குறித்து உத்திரகோசமங்கை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.