வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (04/11/2018)

கடைசி தொடர்பு:09:43 (04/11/2018)

தேனியில் எய்ட்ஸ் விழிப்பு உணர்விற்காக மீம்ஸ் போட்டி!

எய்ட்ஸ் விழிப்பு  உணர்விற்காக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் மீம்ஸ் கேட்டிருக்கிறார் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்.

ஆட்சியர்

தேனியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம், வரும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலமாக, ‘A MEME A DAY’ - என்ற தலைப்பில் மீம்ஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, “எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ள மக்களின் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு மற்றும் அவர்களைச் சமூகத்தில் இருந்து புறக்கணித்தல் செயல்களைச் செய்யாமல் இருத்தல், இரத்ததானம், பால்வினை நோய் போன்றவை குறித்து மீம்ஸ் தயார் செய்யலாம். மீம்ஸ் உருவாக்கும்போது போட்டிக்கு தொடர்பு இல்லாததையோ, சினிமா நடிகர்களின் படத்தினையோ, அரசியல் மற்றும் கட்சிகளின் கொடி, சின்னம் போன்றவையோ, விலங்குகளின் படமோ, ஆபாசமான படங்களோ மற்றும் கருத்துகளோ, திரைப்பட வசனங்களோ இடம் பெறக்கூடாது. எந்தவொரு கருத்தையும் நகல் எடுக்கக்கூடாது. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்களது புகைப்படங்களுடன், amemeday.tnsacs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் மீம்ஸ்களை அனுப்பலாம்.”என்றார்.