''டி.டி.வி தினகரன் ஆளுங்க அவ்ளோலாம் வொர்த் இல்ல!" - பொன்னையன் கறார் | "TTV Dinakaran's party questions can not be answered!"- ponnaiyan

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (04/11/2018)

கடைசி தொடர்பு:12:16 (04/11/2018)

''டி.டி.வி தினகரன் ஆளுங்க அவ்ளோலாம் வொர்த் இல்ல!" - பொன்னையன் கறார்

''டி.டி.வி தினகரன் ஆளுங்க அவ்ளோலாம் வொர்த் இல்ல!

'18 எம்.எல்.ஏ வழக்கில், மேல் முறையீடு செய்வோம்' என்று கடந்த வாரம் அறிவித்திருந்த டி.டி.வி தரப்பு, இப்போது 'அப்பீல் இல்லை; இடைத்தேர்தலைச் சந்திக்கிறோம்' என்று தடாலடியாக யு டர்ன் அடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
'18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்' என்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, டி.டி.வி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன், 'மேல்முறையீடு செய்யமாட்டேன்' என்று முதலில் அறிவித்தார். ஆனால், தீர்ப்பு வெளியானபிறகு டி.டி.வி தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தங்கத் தமிழ்ச்செல்வன், 'மேல்முறையீடு செய்வோம்' என்றார். 

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி

இதற்கிடையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், 'மேல் முறையீடு இல்லை' என்று அறிவித்திருக்கிறார். அரசியல் அரங்கையே குழப்பியடிக்கும் இந்த அறிவிப்புகளின் பின்னணி பற்றித் தெரிந்துகொள்ளும் நோக்கில், டி.டி.வி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வனிடம் 'என்னதான் ஆச்சு.... ஏன் இந்தக் குழப்ப அறிவிப்புகள்?' என்றக் கேள்வியைக் கேட்டுவைத்தோம்.

''மேல்முறையீடு செய்வதற்கு 90 நாள்கள் காலக்கெடு இருக்கிறது. 89 ஆவது நாளில்கூட மேல்முறையீடு செய்ய முடியும். ஏற்கெனவே, திருப்பரங்குன்றம் தொகுதியில், முதல்வர், அமைச்சர்கள் என 2000 பேர் ஒன்றுகூடி இடைத் தேர்தலுக்குத் தயார் என்று காட்டிக்கொண்டார்கள். ஆனால், அதற்கு முன்பே தலைமைச் செயலாளர் மூலமாக, 'ரெட் அலெர்ட்'டைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தவிடாமல் நிறுத்துவதற்கான ஏற்பாட்டையும் செய்துவிட்டார்கள். 

தினகரன்

இப்போதும்கூட, 20 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்போவதாகச் சித்திரிக்கும் இந்த ஆட்சியாளர்கள், பின்னர் வழக்கம்போல், மத்திய அரசிடம் சொல்லி, தேர்தலே நடக்காமல் பார்த்துக்கொள்வார்கள். எங்களையும் கட்சித் தொண்டர்களையும் ஏமாற்றத்தான் தேர்தல் அறிவிப்பும், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனமும் செய்கிறார்கள். இந்த உண்மையையெல்லாம் நாங்கள் புரிந்துகொண்டோம். 

நாங்கள் மேல்முறையீடு சென்றால், 'உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை'கூடக் கிடைக்கலாம். ஆனால், அப்போதும்கூட இந்த ஆட்சியாளர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, 'இந்த வழக்கு முடிகிற வரையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது' என்றும் ஆணை வாங்குவார்கள். இப்படியெல்லாம் பார்த்தால், இன்னும் இரண்டு வருடங்கள்கூட இந்த மேல்முறையீடு வழக்கு தொடரும் நிலை ஏற்படும். இந்தச் சூழலையெல்லாம் கருத்தில்கொண்டுதான், இப்போது 'மக்கள் மன்றத்திலேயே போய் நேரடியாக நீதியைக் கேட்டுவிடலாமே...' என்ற எண்ணத்துக்கு நாங்கள் வந்துவிட்டோம். எனவே, இப்போதே தேர்தலை நடத்தினாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று வார்த்தைகளில் உறுதிகாட்டிய தங்க தமிழ்ச் செல்வனிடம், 'மேல்முறையீடு குறித்து நீங்களே மாறி மாறி கருத்து வெளியிட்டிருந்தீர்களே... அது ஏன்?' என்றக் கேள்வியை கேட்டோம்.

தங்க தமிழ்ச் செல்வன்

''இப்படியெல்லாம் நடக்கும் என்பதைக் கணித்துத்தான் நான் ஆரம்பத்திலேயே அப்படிச் சொன்னேன். அதாவது, இந்த ஆட்சியாளர்கள் சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். நாம் மேல்முறையீடு சென்றால்கூட, அந்த வழக்கை முடிக்கவிடமாட்டார்கள். வழக்கு இழுத்துக்கொண்டேதான் போகும்; இறுதியில் நமக்குச் சாதகமாகவும் தீர்ப்பு வராது என்பதையெல்லாம் முன்னமே நான் கணித்துவிட்டேன். இந்தச் சூழலில்தான், எம்.எல்.ஏ-க்கள் கலந்து ஆலோசனை செய்தபிறகு, 'மேல்முறையீடு செல்வோம்' என்று நானே அறிவித்தேன். அதேநேரம், நாளையே தேர்தல் வந்தால், அந்தத் தேர்தலையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் அப்போதே தெரிவித்திருந்தேனே....'' என்றார் விளக்கமாக.

இதற்கிடையில், இன்றைய தினம் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆகியோருடன் 20 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த நேரத்தில், 'இடைத்தேர்தலே நடைபெறுமா...' என்ற சந்தேகத்தை டி.டி.வி தரப்பினர் எழுப்பிவருவது குறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் பேசினோம்...

பொன்னையன்

''டி.டி.வி தினகரன் தரப்பினரது கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கமுடியாது. 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வை வெற்றி பெற வைப்பதற்காகத் தேர்தல் பொறுப்பாளர்கள் எப்படியெல்லாம் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்பதுகுறித்த ஆலோசனைக் கூட்டம்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

மற்றபடி இடைத்தேர்தலுக்கான தேதியைக் குறிப்பதும், தேர்தலை நடத்துவதும் தேர்தல் ஆணையத்தின் பணிதான். அவர்களது பணியில், நாங்களோ அல்லது வேறு அரசியல் கட்சியினரோ தலையிட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது!'' என்றார்.

இனி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்லவேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்