வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (04/11/2018)

கடைசி தொடர்பு:12:29 (04/11/2018)

"ராசா..அந்தப் பக்கம் கூட்டி போய்விடுப்பா!" இ.எஸ்.ஐ மருத்துவமனை முன் தவிக்கும் முதியவர்கள்

சென்னையின் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியான கே.கே.நகரில் அமைந்திருக்கிறது இ.எஸ்.ஐ மருத்துவமனை. இம்‌மருத்துவமனைக்கு தினந்தோறும் பச்சிளம் குழந்தைகளில் துவங்கி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எக்கச்சக்கமான மக்கள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றனர்.

அசோக்‌நகர் மெட்ரோவிற்கு மிக அருகில் அமைந்துள்ள இம்மருத்துவமனைக்கு அருகிலும், அதன் எதிரிலேயும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. பேருந்திலிருந்து இறங்குபவர்கள் சாலையைக் கடந்து எதிர்ப்புறம் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. வயதானவர்கள் வேகமாக ஓடிச் சாலையைக் கடப்பதும் இயலாத காரியம். சில விபத்துகளும் நடந்துவருகின்றன. 

இ.எஸ்.ஐ, மருத்துவமனை

இந்த விவகாரம் தொடர்பாக புகார்கள் வரவே உண்மை நிலைப்பற்றி அறிய நேரடியாக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். அங்கு வெகு நேரமாக சாலையைக் கடக்க காத்திருந்த மூதாட்டியைத் தாண்டி வாகனங்கள் சற்றும் வேகம் குறையாமல் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தன. அதிக வேகத்துடன் செல்லும் வாகனங்களுக்கு இடையே அந்த மூதாட்டி சாலையைக் கடப்பது மிகக்கடினம். அந்நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு இளைஞரிடம், "யப்பா.. என்னைய கொஞ்சம் அந்தப் பக்கம் கூட்டி போய்விடுப்பா..."  என்று கேட்டு இளைஞரின் துணையுடன் சாலையைக் கடந்தார். 

சாலையைக் கடக்க எத்தனிக்கும் வயதானவர்கள், ஒருவரின் துணையுடனே தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. இது எல்லாச் சமயங்களிலும் சாத்தியமா என்பது தெரியவில்லை. வேலை செய்யாத சிக்னல், போக்குவரத்து நெரிசல், அதிவேகமாக தொடர்ந்து செல்லும் வாகனங்கள் போன்றவற்றால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த சாலையை, வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் கடப்பதற்கு படாதபாடு படுகிறார்கள்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சாலை

கே.கே.நகர், அசோக் பில்லர், மேற்கு மாம்பலம் ஆகியவற்றை இணைக்கும் ஒருவழிச்சாலை இது. இந்நிலையில், மெட்ரோ அல்லது பேருந்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சாலையைக் கடப்பது மிகவும் சவாலாக உள்ளது. சிக்னல் ஏதும்‌ இல்லாத காரணத்தினாலேயே சாலையைக் கடப்பது பிரச்னையாகியிருக்கிறது.

இதனைப்‌பற்றி நம்மிடம் பேசிய மூதாட்டி ரமா என்பவர், " இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் வர்றேன். இங்கதான் மாத்திரை வாங்குவேன். இந்த ரோட்டை தாண்டும்போது 'நான் பிழச்சா உண்டு‌'னு சாமிய வேண்டிக்கிட்டே போவேன். மத்தவங்க‌ மாதிரி என்னால ஓடவும் முடியாது. 'ரோட்டை தாண்டிவிடுறதுக்கு யாராவது கூட வருவாங்களா'னு காத்துட்டே இருப்பேன். அவங்கக் கூடவே போய் ரோட்டைத் தாண்டிருவேன்" என  வருத்தப்பட்டார். "இங்க சிக்னல்கூட வேணாம்மா. டிராஃபிக் போலீஸ் யாராச்சும் சாலையை தாண்டிப்போறதுக்கு ஏத்தபடி டிராஃபிக்கை சரிசெஞ்சாலே போதும்." என்கிறார் சாலையைக் கடக்கக் காத்திருந்த பெரியவர் கதிர்வேலன்.

சாலை

இம்‌மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பெரும்பாலானோர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் சாலையைக் கடப்பதற்கு மேற்கொள்ளப்படும் சிரமங்கள் சொல்லத்தேவையில்லை. சாலையைக் கடக்கும் முயற்சியின்போது நடந்த சில விபத்துக்களால் உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான சான்றிதழ் மற்றும் உதவித்தொகை சான்றிதழ்களை பெறுவதற்காக இம்மருத்துவமனைக்கு தினமும் வந்து செல்கின்றனர். சாலையைக் கடக்கும் இடத்தில் வேகத்தடை எதுவுமில்லை. "வேகத்தடை அமைத்தாலாவது சாலையைக் கடப்பதற்கு ஓரளவுக்கு எளிதாக இருக்கும்" என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும், மெட்ரோ நிலையம் அருகில்  பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவலர்கள் இதனைச் சரி செய்ய ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்  என்பதே சாலையைக் கடக்கும் பலரின் வேண்டுகோளாக உள்ளது.