‘சசிகலாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜூ!’ - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு! | Minister kadambur raju is a sleeper cell of sasikala says Admk ex mla

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (04/11/2018)

கடைசி தொடர்பு:12:10 (04/11/2018)

‘சசிகலாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜூ!’ - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

"தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையான அ.தி.மு.க., தொண்டர்களை ஒதுக்கி வைத்து கட்சியை காலி செய்து வருகிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. தினகரன் அணிக்கு எம்.எல்.ஏ.,க்களை அனுப்பியதே அவர்தான். சசிகலாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜூ." என விளாத்திகுளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் குற்றம்சாட்டியுள்ளார்.
 

ஸ்லீப்பர் செல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அ.தி.மு.க.வின் 47வது ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.  தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுகளில் தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியின் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மார்க்கண்டேயன் மற்றும் சின்னப்பன் ஆகியோர் தனித்தனியாக விழா நடத்தி உள்ளனர். மார்கண்டேயன் ஓ.பி.எஸின் ஆதரவாளர். சின்னப்பன் எடப்பாடியாரின் ஆதரவாளர். இந்த தொகுதியில் மீண்டும் சீட் பெறுவதற்காக தனது பலத்தைக் காட்டும் வகையில் தனித்தனியாக விழா நடத்தி உள்ளனர். மார்கண்டேயன் நடத்திய நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதனும், சின்னப்பன் நடத்திய நிகழ்ச்சிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ., மார்கண்டேயன், " இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல, ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடைபெறும் அ.தி.மு.க.,வின்  தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளை கவுரப்படுத்தும் விழாதான். இந்த விழாவுக்கு எதிராக போட்டி கூட்டம் போடுவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கூட்டம் நடத்துவதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மறைமுகமாக கடும் தொந்தரவுகளை கொடுத்தார்.

அ.தி.மு.க.,வில் யாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை முதல்வரும் துணை முதல்வரும் தான் முடிவு செய்ய முடியும், அமைச்சர் கடம்பூர் ராஜு கிடையாது. எனது குடும்பத்தினர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து மணல், ஜல்லி மற்றும் கட்டிட பொருட்கள் வியாபாரம் செய்தனர். நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு அந்தத் தொழிலையும் எனது குடும்பத்தினர் விட்டுவிட்டனர் ஆனால் ஆசிரியர் பணிக்கு படித்த அமைச்சர் கடம்பூர் ராஜு என்ன தொழில் செய்தார்.என்பது எல்லோருக்கும் தெரியும்

நான் சட்டமன்ற உறுப்பினர் இருந்தபோது அதிமுக வளர்ச்சிக்கும், உள்ளாட்சி தேர்தலிலும் கட்சி வெற்றி பெற வைத்தேன், ஆனால் கடம்பூர் ராஜுவால் வெற்றி பெற வைக்க முடியவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜு போன்று இப்படி  வேலை பார்த்தால் மாவட்டத்திற்கு ஒரு எம்.எல்.ஏ., என்ற சூழ்நிலைதான்  இருக்கும

சின்னம்மாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு. அ.தி.மு.க.,வில் இருந்து டிடிவி அணிக்கு எம்.எல்.ஏ.,க்களை அனுப்பிவைப்பது அமைச்சர் கடம்பூர் ராஜு தான். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அ.தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்களை ஒதுக்கி கட்சியை காலி செய்து வருகிறார். அவர் இதே நிலைப்பாட்டைத் தொடர்ந்தால் அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார். " என்றார்.  ஒரே கட்சியில் கோஷ்டிப் பூசலால் நடந்த விழா அ.தி.மு.க.,வினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க