வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:15:30 (04/11/2018)

எண்ணூர் துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதி ரத்து!

எண்ணூர் மீனவர்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், எண்ணூர் துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதி மறுத்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கிழக்கு கரைகளில் புதிய துறைமுக வசதிகள் அமைப்பதற்கான காமராஜர் துறைமுகத்தின் திட்டத்தை நிராகரித்துள்ளது. இது எண்ணூர் மீனவர்களுக்குக் கிடைத்த முக்கியமான வெற்றி. இதற்குமேலும் எண்ணூர் தொழிற்சாலைகள் எண்ணூர் முகத்துவார பகுதிகளிலும் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் மேற்கு கரைகளிலும் வராமல் தடை செய்வதற்கான போராட்டம் தீவிரம் அடையுமென்று இங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

எண்ணூர் துறைமுகம்

உப்பங்கழியின் கிழக்குப் பகுதி அலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது, அதன் சுற்றுச்சூழல் எளிதாகப் பாதிக்கக்கூடியது. அங்கு அலுவலகங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களைக் கட்ட காமராஜர் துறைமுகம் திட்டமிட்டிருந்தது. மீனவர்களின் போராட்டங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான எதிர்ப்பு மனுக்களைக் கணக்கில் கொண்டு சுற்றுச்சூழல் துறை மற்றும் CRZ இந்தக் கட்டமைப்புகளை இடமாற்றுமாறு துறைமுக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

“வளர்ச்சிச் செயல்களைவிட நீர்நிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் இதில் அறிவித்துள்ளது. "எனினும் கரி கிடங்குகளை (Coal Yard) நீர்நிலங்களின் மேற்குப் பகுதிகளில் அமைக்க மத்திய அமைச்சகம் அனுமதித்துள்ளது. அதற்காக 2018-ம் ஆண்டு முறையின்றி உருவாக்கிய திட்ட வரைபடங்களை நீர்நிலங்களின் உண்மையான எல்லையைச் சுட்டிக்காட்டும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்" என்கிறார் அந்தப் பகுதிகளில் முக்கியப் பங்காற்றும் காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த R.L..ஶ்ரீவாசன்.

எண்ணூர் அனைத்து மீனவ கிராம கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் திரு செல்வராஜ் கூறுகையில்,  “கடந்த இருபது வருடங்களில் எண்ணூர் நீர்நிலங்கள் சுமார் ஆயிரம் ஏக்கர்களை இழந்துள்ளது. எண்ணூர் நீர்நிலைகளை இனி எந்த ஒரு நோக்கத்திற்கும் அபகரிக்கக்கூடாது என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை. "எங்களது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் இதை நம்பியே உள்ளது. கிழக்குப்பகுதி பாதுகாக்கப்படுவது மிக்க நல்ல செய்தியே. நாங்கள் மேற்கு பகுதியில் கட்டுமானப்பணிகளை அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.