வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (04/11/2018)

`சிலைக்கு ரூ.3,000 கோடி செலவு செய்யும் அரசால் புலியைப் பராமரிக்க இயலாதா?’ - கொதிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்

``அவள் ஊருக்குள் வரவில்லை.. உணவு கேட்டு யாருடைய வீட்டின் கதவுகளையும் தட்டவில்லை''. இரண்டு குட்டிகளுக்கு தாய், என்ற அடையாளத்துடன் வனத்துக்குள் வலம் வந்து கொண்டிருந்த 5 வயதுடைய பெண் புலிதான் அவ்னி.

அவ்னி

"13 பேரின் உயிரிழப்புக்கு காரணம் " என்று ஆதாரமில்லாமல் அவள் மீது குற்றச்சாட்டு திணிக்கப்பட்டது. வனத்துறை அவ்னியைத் தேடியது. அவ்னியை உயிருடனோ, சுட்டுக் கொன்றோ பிடிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்குகிறது. வன விலங்குகளின் உயிரைக் குடிக்கும் மிருகங்களின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவ்னியின் உயிர் பறிக்கப்பட்டும் விட்டது. அவ்னியின் குட்டிகளின் நிலை என்ன ஆனதென்றே தெரியவில்லை.  அவ்னியின் படுகொலை, மஹாராஷ்டிராவை தாண்டி நாடு முழுவதும் சூழலியல் ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமமூர்த்திஇதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமமூர்த்தி, "ஐந்து வயதில் ஒரு புலி ஆட்கொல்லியாக மாற வாய்ப்பு மிகமிகக் குறைவு. இந்த வயதில் அடிபட்டு பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாத நிலையில் வேண்டுமானால், அது எளிய இரையான மனிதனை வேட்டையாடலாம். அவ்னி விஷயத்தில் அதற்கும் வாய்ப்பில்லை. உடலளவில் பாதிப்படைந்த ஒரு புலியால் மூன்று மாத காலங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான வேட்டைக்காரர்களிடமிருந்து தப்பித்து வாழ்வது என்பது மிக கடினமான ஒன்று. அதையும் தாண்டி கொல்லப்பட்ட மனிதர்கள் பெரும்பாலும், மனிதர்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடைசெய்யப்பட்ட Core Zone எனப்படுகிற அடர்ந்த வனப்பகுதி. இங்கே மனிதர்களுக்கு என்ன வேலை?. அவர்களை நடமாட அனுமதித்தவர்கள் யார்?.

கொல்லப்பட்ட மனிதர்களை ஆய்வு செய்ததின் மூலம், அனைத்து கொலைகளுமே அவ்னியால் நடத்தப்படவில்லை. இதில் வேறொரு ஆண்புலியும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதன்மூலம், அடுத்த புலிக் கொலைக்கு காரணத்தை இப்போதே விதைக்க துவங்கி விட்டார்கள் என்பது மட்டும் புரிகிறது. இப்படியே காரணங்களை உருவாக்கி மெல்ல மெல்ல, அந்தக் காட்டிலுள்ள புலிகள் ஒவ்வொன்றாக இனி கொல்லப்படலாம்.

பொதுவாக, மிக சிறிய செலவினங்களைக்கூட எதிர்கொள்ள தயங்கும் வனத்துறை, நவாப் ஷாஃபத் அலியின் மகன் அஸ்கர் அலிகான் உள்ளிட்ட நூற்றுக்கணக்காணோர் கொண்ட குழுவிற்கு சுமார் மூன்று மாத காலத்திற்கு மேலாக செலவை செய்திருக்குமா? இல்லையென்றால் அந்த செலவுகளை ஏற்றது யார் என்பதுதான் மிக முக்கியமான சந்தேகம்.

இதன் பின்னணியில் ஏதோ ஓர் மர்மம் இருக்கிறது. யாரோ பல்வேறு காரணங்களுக்காக, இந்த நிகழ்வை மறைமுகமாக இயக்குகிறார்கள். ஒரு வேளை,அந்த புலி வாழும் காடுகூட அவர்களுக்கு மிக முக்கியமான இடமாக தேவைப்பட்டிருக்கலாம். படேல் சிலைக்கு மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் இந்த அரசுக்கு, அந்தப் புலியை மீட்டு பராமரிப்பது என்பது கடினமான காரியமா?. அதை பத்திரமாக மீட்டு, ஏதாவது உயிரியல் பூங்காவில் ஒப்படைத்திருந்தால் கூட, அதன் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ள பலர் முன்வந்திருப்பார்கள்" என்றார் வேதனையுடன்.

உயிரிழந்த 13 பேரும் வனப்பகுதிக்குள் எப்படி நுழைந்தனர்?. இதில், கார்ப்ரேட்களின் சதி என்ன என்று ஏராளமான கேள்விகள் உள்ளன. ஆனால், அந்த கேள்விகளுக்கெல்லாம் இடமே கொடுக்காமல் அவ்னியின் சடலத்துடன் சேர்ந்து, உண்மைகளையும் எரித்துவிட்டனர்.