`திருமணத்தன்று குடும்பத்துடன் உடல் உறுப்பு தானம்!’ - அசத்திய ஊரப்பாக்கம் தம்பதி | Couple donated organ with family on marriage day

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (04/11/2018)

கடைசி தொடர்பு:19:52 (04/11/2018)

`திருமணத்தன்று குடும்பத்துடன் உடல் உறுப்பு தானம்!’ - அசத்திய ஊரப்பாக்கம் தம்பதி

பொதுமக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கள் திருமணத்தின் குடும்பத்துடன் உடல்உறுப்பு தானம் செய்தத தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

செல்லகுமார்

செல்லகுமார்காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்லக்குமார். மனைவி சிவரஞ்சனி. அப்பா மணிவேல். அம்மா இந்திரா. இவர் தனது திருமணத்தின்போது, குடும்பத்துடன் உடல் உறுப்புதானம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது தொடர்பாக செல்லக்குமாரிடம் பேசினோம். ``தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தைத் தொடங்கி 10 வருடங்கள் ஆகிறது. இந்தியாவிலே தமிழகத்தில்தான் உடல் உறுப்புதானம் அதிகமாக செய்துள்ளனர். உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனைகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மேற்கண்டவற்றை ஒரு கட்டுரை வாயிலாக அறிந்துகொண்டேன்.

மேலும், உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து மக்களிடையே போதிய விழிப்புஉணர்வு இல்லை. ரத்த தானம் செய்யும் அளவுக்கு உடல் உறுப்பு தானம் செய்ய யாரும் முன்வருவதில்லை. யோசிக்கின்றனர். அதனால், மக்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த நினைத்தேன். அதை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என யோசித்தபோது, எனக்கு திருமணம் முடிவானது. ஆக, திருமணத்தின் போது உடல்உறுப்பு தானத்தை செய்யலாம் என முடிவு செய்தேன்.

இதுகுறித்து என் குடும்பதினரிடம் தெரிவித்தேன். அவர்கள் யாரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. `நல்ல விஷயம் நாங்களும் செய்றோம்’ என அவர்களும் முன்வந்தனர். அதேபோல என் மனைவி வீட்டாரிடமும் தெரிவித்தேன். இதற்கு என் மனைவி உடனடியாக சம்மதம் தெரிவித்தார். அவரது அப்பா அம்மாவும் எந்த தடையும் விதிக்கவில்லை. நான், என் மனைவி, என் குடும்பத்தார் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம். எனக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. என் அப்பாவுக்கும் இது தொடர்பான யோசனை ஏற்கெனவே இருந்தது. இரண்டு தரப்பு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் இந்த செயலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். என் நோக்கம் நிறைவடைந்தது" என்றார்.