வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:05:32 (06/11/2018)

`சபரிமலைக்கு நான் செல்ல மாட்டேன்!’ - துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவின் மகள் தீபா

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவின் மகள் தீபா வெங்கட், ``எந்த வித வரலாற்று ஆவணங்களும் இல்லாத வெளிநாடுகளுக்கு பணத்தைச் செலவுசெய்து சுற்றுலா செல்கின்றனர். வரலாற்று ஆவணங்கள் நிறைந்த பெரிய கோயில் போன்ற சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் நம் நாட்டில் உள்ளன. கலாசாரத்தைப் பின்பற்றும் தென்னிந்தியப் பெண்கள், சபரிமலைக்குச் செல்ல மாட்டார்கள்; நானும் செல்ல மாட்டேன்” என்று தெரிவித்தார்.

வெங்கையநாயுடு மகள்

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவின் மனைவி உஷா, அவரது மகள் தீபா வெங்கட், பேரன் விஷ்ணு, பேத்தி சுஷ்மா உள்ளிட்ட  அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள், அங்குள்ள ஓவியங்கள், கட்டட அமைப்புகள் உள்ளிட்டவற்றை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகக் கண்டு ரசித்ததோடு, வியந்து பாராட்டினர். பின்னர், துணை ஜனாதிபதியின் மகள் தீபா வெங்கட் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டடக் கலை அமைப்பை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.  அவ்வளவு அற்புதமாக உள்ளது. எந்த வரலாற்று ஆவணங்களும் இல்லாத வெளிநாடுகளுக்கு பணத்தைச் செலவுசெய்துகொண்டு சுற்றுலா செல்கின்றனர். வரலாற்று ஆவணங்கள் நிறைந்த தஞ்சைப் பெரிய கோயில் போன்ற சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் நமது நாட்டில் உள்ளன.

தீபா வெங்கட்

தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஓவியங்கள், கட்டடக்கலை அமைப்பு ஆகியவற்றைப் பார்க்கும் போது, தமிழக மன்னர்களின் கட்டடக்கலை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிய சோழ மன்னரின் வழிவந்த மற்றொரு மன்னர்தான், கம்போடியாவில் புகழ்பெற்ற கோயிலையும் கட்டியுள்ளார். இன்றைய காலத்தில், நமக்கு எது தேவைப்பட்டாலும் கூகுள் உள்ளிட்ட இணையதள வசதியைக் கொண்டு தேடிக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், எந்தவித அறிவியல் முன்னேற்றமும் இல்லாத அந்தக் காலத்தில் இவ்வளவு உயரமான கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றால், இந்திய நாட்டின் பாரம்பர்யம், கலாசாரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

தொன்மை வாய்ந்த இந்திய நாட்டின் சிலைகள் இந்திய நாட்டுக்குதான் சொந்தம்.  வேறு யாருக்கும் சொந்தம் இல்லை. எனவே, சிலைகளைப் பாதுகாப்பது நமது கடமை. சிலைகளை யாராவது திருடிச் சென்றிருந்தால், அந்தச் சிலையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி கூறியதுபோல, உங்கள் வேலை எதுவோ அதைச் செய்தால், அது திறம்பட இருக்கும். அதே போல, நமது நாட்டு வரலாற்றுச் சின்னங்களை நாம்  பாதுகாக்க வேண்டும். சபரிமலைக்கு கலாசார முறைப்படி பெண்கள் செல்லக் கூடாது. கலாசாரத்தைப் பின்பற்றும் தென்னிந்தியப் பெண்கள் சபரிமலைக்குச் செல்ல மாட்டார்கள்; நானும் செல்ல மாட்டேன்” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க