சபரிமலை சந்நிதான பாதுகாப்புப் பணியில் 30 பெண் காவலர்கள்! | Kerala to deploy 30 women police in Sabarimala: Sources

வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (04/11/2018)

கடைசி தொடர்பு:11:02 (05/11/2018)

சபரிமலை சந்நிதான பாதுகாப்புப் பணியில் 30 பெண் காவலர்கள்!

சித்திர ஆட்ட திருநாளுக்காக நாளை சபரிமலை நடை திறப்பதை முன்னிட்டு, சந்நிதான பாதுகாப்புக்கு முதன் முதலாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன. மாதாந்திர பூஜைக்காகக் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 5 நாள்கள் ஐயப்பன் கோயில் நடை திறந்திருந்தது. அப்போது, சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களைப் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தடுத்தனர். இதுதொடர்பாக 545 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, இதுவரை 3,731 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சித்திர ஆட்டத் திருநாள் பூஜைக்காக, நாளை மாலை சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. வரும் 6-ம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். இந்தமுறை சபரிமலைக்கு வரும் பெண்களை யாரும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக, கேரள அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சந்நிதானம் தொடங்கி நிலக்கல் வரை 144 தடை உத்தரவு நேற்று நள்ளிரவே அமலுக்குவந்துவிட்டது. ஏடிஜிபி அனில்காந்த் தலைமையில் 2,300 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செய்தியாளர்கள், நிலக்கல்லுக்கும் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், 50 வயதைக் கடந்த பெண் பக்தர்களை சபரிமலை சந்நிதானத்துக்கு அனுப்பி, இளம் பெண்கள் வராமல் தடுக்கும் நடவடிக்கையில் இந்து அமைப்புகள் ஈடுபட உள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, சபரிமலை சந்நிதானத்தில் 50 வயதைக் கடந்த 30 பெண் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் நியமிக்க காவல் துறை முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் போலீஸார், இன்று மாலை நிலக்கல் வந்துள்ளதாகவும், இன்று இரவு அல்லது நாளை காலை அவர்கள் சந்நிதானத்தில் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.