வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (05/11/2018)

கடைசி தொடர்பு:10:30 (05/11/2018)

`வருமானம் பத்தல' - அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்பட்ட பாரம்பர்ய ரயில் நிலையம்!

மூடப்பட்ட மல்லியம் ரயில் நிலையத்தால் பாதிப்புக்குள்ளாகிய அப்பகுதி மக்கள், ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

மல்லியம் ரயில் நிலையம்

மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி வழித்தடத்தில், மயிலாடுதுறைக்கு அடுத்ததாக உள்ளது மல்லியம் ரயில் நிலையம். விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி மெயின் லைன் போடப்பட்ட காலத்திலிருந்து இந்த நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு, தினசரி எட்டு பாசஞ்சர் ரயில்கள் நின்றுசென்றன. இதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், பணிக்குச் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். நன்கு செயல்பட்டுவந்த மல்லியம் ரயில் நிலையத்தில் போதிய வருவாய் இல்லை எனக் கூறியது மட்டுமில்லாமல், எந்தவித முன்னறிவிப்புமின்றி மல்லியத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, நிலையமும் மூடப்பட்டது.

இதனால் மல்லியம், ஆணைமேலகரம், அரையாபுரம், மகாதானபுரம், மூவலூர், அசிக்காடு, சோழன்பேட்டை, வானாதிராஜபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மூடப்பட்ட ரயில் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இரண்டு மாதங்களுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காண ரயில்வே அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், காலக்கெடுவுக்குள் மல்லியம் ரயில் நிலையம் தொடர்பாக எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து, ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து மல்லியம் தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மல்லியம் ரயில் மீட்புக்குழு தலைவர் கோவி. சேதுராமன் கூறுகையில், ``ரயில்வே துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பலமுறை கடிதம் அனுப்பியுள்ளேன். மல்லியம் ரயில் நிலையம் பாரம்பரிய மிக்க நிலையங்களில் ஒன்று. போதிய வருமானம் இல்லை எனக் காரணம் கூறிவரும் நிலையில், ஆறு மாதம் சோதனை அடிப்படையில் ரயிலை இயக்க நடவடிக்கை எடுங்கள். அதன்பிறகு இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்தால், மல்லியம் வழியாக எந்த ரயிலும் செல்லாத வகையில் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்" என்றார்.

மல்லியம் ரயில் நிலைய நிறுத்த முகவர் ராஜமாணிக்கம் கூறுகையில், "தற்போது, மல்லியம் நிலையத்தில் மாதம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை வருமானம் கிடைத்துவருகிறது. அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து, முறையாகத் திட்டமிட்டு முயன்றால், வருமானத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். இதைவிடக் குறைவான வருமானம் உள்ள ரயில் நிலையங்கள் எல்லாம் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தவறான தகவல்களைக் கூறி ரயில் நிலையத்தை நிரந்தரமாக மூடிய ரயில்வே துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.