`தமிழகம் போர்க்களமாக மாறும்' - ஆளுநருக்கு சீமான் கண்டனம்! | seeman slams governor in rajiv gandhi assassination case issue

வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (05/11/2018)

கடைசி தொடர்பு:10:20 (05/11/2018)

`தமிழகம் போர்க்களமாக மாறும்' - ஆளுநருக்கு சீமான் கண்டனம்!

'ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறைக்குள் வதைப்பட்டுக்கொண்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் போர்க்களமாக மாறும்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

சீமான்

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ``இந்த ஏழு பேரின் விடுதலை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் நெடுநாள் கனவு. 12 கோடி தமிழர்கள் மீதும் சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்கான வரலாற்று வாய்ப்பு. அதற்காக நாம் கொடுத்த விலையும், பட்ட துயருமும் மிக மிக அதிகம். கால் நூற்றாண்டு காலமாகக் கால்கடுக்க இந்நிலமெங்கும் சென்று, தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் களத்தில் நிற்கும் தாய் அற்புதம்மாள் சிந்தியக் கண்ணீரையும், வலியையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மண்ணில் நடந்த பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கருத்துப் பரப்புரைகள், அரசியல் அழுத்தங்கள், சட்டப்போராட்டங்கள், செங்கொடியின் உயிரீகம் எனப் பல அசாத்தியப் போர்க்களங்களைக் கண்டே இன்றைக்கு ஏழு பேரின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். பொதுவாக, ஆயுள் தண்டனைக் கைதிகளை 14 ஆண்டுக் காலத்திலேயே நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலைசெய்வதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ஏழு பேரும், 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்குள் அடைப்பட்டுக்கிடக்கிறார்கள் என்பது அப்பட்டமான மனிதவதை. தனிமனிதக் காழ்ப்புணர்ச்சிக்கும், அரசியல் பழிவாங்குதல் போக்குக்கும் இரையாக்க முனையும் கொடுஞ்செயலைப் புரிவது ஏற்கமுடியாத மனித உரிமை மீறல். 

ஏழு பேரையும் விடுதலை செய்வதெனத் தீர்மானித்து, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த 2014ல் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டது அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ். தற்போது, எழுவரையும் விடுதலைசெய்வதற்குரிய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவை விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆளுநர் முடிவெடுப்பதற்குரிய காலக்கெடு எதுவும் சட்டத்தில் குறிப்பிடப்படாததால், அதையே சாதகமாகக்கொண்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் எத்தகைய முடிவையும் எடுக்காது, ஆளுநர் காலங்கடத்திவருவது கடும் கண்டனத்துக்குரியது. 

மக்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்ட சட்டப்பேரவையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்குவதுதான் ஆளுநரின் அதிகாரமேயன்றி தனிப்பட்ட அதிகாரம் எதுவும் அவருக்கில்லை. ஆகவே, 8 கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை ஆளுநர் அலட்சியப்படுத்துவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கும் படுபாதகச்செயல். இதற்கெதிராக ஜனநாயகப் பேராற்றல்களும், இன உணர்வாளர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூகப் போராளிகளும், இனமானத் தமிழர்களும்  ஓரணியில் திரண்டு, எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்தவேண்டியது வரலாற்றுப் பெருங்கடமை என்பதை உணர்ந்து, வீதிக்கு வந்து போராட அறைகூவல் விடுக்கிறேன்.

தீர்மானம் இயற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதெனக் கருதி நிற்கும் மோசடித்தனத்தை தமிழக அரசு இனியும் செய்யாது, தமிழக ஆளுநருக்கு அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், தமிழக ஆளுநர் அவர்கள், இவர்களின் விடுதலைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி, அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறேன். இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், தமிழர் இறையாண்மையைக் காக்கும்பொருட்டு மக்களை அணிதிரட்டி, தமிழக வீதிகளைப் பெரும் போராட்டக்களமாக மாற்றுவோம்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க