`பெங்களூருவைவிட சென்னை மேல்' - ஓலா வெளியிட்ட டிராஃபிக் ரிப்போர்ட்! | 75% of people in Chennai prefer public transport says ola report

வெளியிடப்பட்ட நேரம்: 05:21 (05/11/2018)

கடைசி தொடர்பு:09:10 (05/11/2018)

`பெங்களூருவைவிட சென்னை மேல்' - ஓலா வெளியிட்ட டிராஃபிக் ரிப்போர்ட்!

பெங்களூருவைவிட சென்னை நகரத்தின் டிராஃபிக் பரவாயில்லை எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை. 

பெருகிவரும் மக்கள் தொகை, புலம் பெயர்தல் காரணமாக இந்தியாவின் முன்னணி நகரங்கள் பலவற்றிலும் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதைச் சமாளிக்க பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் எனப் பொது போக்குவரத்துத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டாலும்,  அதிகப்படியான ஸ்கூட்டர்கள், கார்கள் காரணமாக சாலை போக்குவரத்து மார்க்கமாகச் செல்பவர்களுக்குத் தினமும் பெரும் சோகம்தான். சாதாரண நாள்களில்தான் இந்தச் சோகம் என்றால், முக்கியமான விழா நாள்களில் அதைவிட அதிகம். 

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில், நகரத்தை விட்டு கடக்கவே, பல மணி நேரம் ஆகிவிடுகிறது. இதற்கிடையே, கால்டாக்ஸி நிறுவனமான ஓலா, இந்தியாவில் உள்ள 20 முக்கிய நகரங்களில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து விருப்பங்கள், போக்குவரத்து நெரிசல்கள், சிக்கல்கள் தொடர்பான ஓர் ஆய்வை சமீபத்தில் நடத்தியது. 20 நகரங்களில் உள்ள 43,000 பொதுமக்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதன் ஆய்வறிக்கை மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் வெளியிடப்பட்டது. 

டிராஃபிக்

இதில், பெங்களூருவைவிட சென்னை நகரத்தின் டிராஃபிக் பரவாயில்லை எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் இயல்பான போக்குவரத்து நடைமுறையே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆய்வு, ``75 சதவிகித மக்கள், பொது போக்குவரத்தில் பயணப்படவே விருப்பம் தெரிவித்துள்ளனர். சராசரியாக, சென்னை மாநகரப் பேருந்து ஒன்று சுமார் 1000 நபர்களை ஒரு நாளையில் ஏற்றிச்செல்கிறது. இது, மற்ற மெட்ரோ சிட்டிகளைக் காட்டிலும் அதிகம். பொது போக்குவரத்தில் பயணம்செய்யும் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், தாங்கள் பயணம் செய்ய விரும்பும் வாகனமாக சென்னை மாநகரப் பேருந்துகளையே குறிப்பிட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை  ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல சராசரியாக ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே செலவாகிறது. அதேநேரம், அதிக வருமானம் உள்ள 95 சதவிகித மக்கள், தங்களின் தினசரி பயணத்துக்கு பஸ் போன்ற பொது போக்குவரத்தைத் தவிர்க்கின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வில், பெங்களூரு மோசமான இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க