வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/11/2018)

கடைசி தொடர்பு:08:24 (05/11/2018)

‘மரகதத்தை மாணிக்கத்தால்தான் காப்பாற்ற முடியும்!’ - தமிழிசை ட்வீட்

'காவல் துறை உயர் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை கனிவுடன் அரசு பரிசீலிக்க வேண்டும்' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில். சிவன் கோயிலான இங்கு, விலை மதிப்பிட முடியாத பச்சை மரகதக்கல்லினால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்த கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இரவு நேரத்தில் கோயில் சந்நியில் காவலாளிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கோயில் உண்டியல் அருகே மறைந்திருந்த இருவர், காவலாளி செல்லமுத்து என்பவரைத் தாக்கியுள்ளனர். செல்லமுத்து உண்டியலைத் தொட்டு அபாய ஒலியை ஒலிக்கச் செய்துள்ளார். இதனால், ஊர்மக்கள் கோயிலுக்குள் திரளத் தொடங்கினர். இதை அறிந்த கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த காவலாளி செல்லமுத்து, ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, தனது ட்விட்டர் பக்கத்தில்,  'உத்திரகோச மங்கை ஆலயத்தில் மரகதலிங்க நடராஜர் சிலையைத்திருட முயற்சி' என்ற செய்தி கவலை அளிக்கிறது. மரகதலிங்கத்தைக் காப்பாற்ற மாணிக்கத்தால்தான் முடியும். காவல் துறை உயரதிகாரி பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பைக் கனிவுடன் அரசு பரிசீலிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.