வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (05/11/2018)

கடைசி தொடர்பு:08:36 (05/11/2018)

‘ஐயப்பனை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்’- பாதுகாப்பு வளையத்தில் சபரிமலை!

சபரிமலை தரிசனத்துக்குச் செல்பவர்கள், அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

சித்திர ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயில் நடை திறக்கிறது. நாளை இரவு வரை நடை திறந்திருக்கும். இதற்காக இன்று மதியத்துக்கு மேல், பக்தர்கள் பம்பை கடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பம்பை, நிலக்கல், இடவங்கல், சன்னிதானம் என 6 இடங்களில் 3000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பம்பையில் மட்டும் 100 பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில், 50 வயதுக்கு மேற்பட்ட 30 பெண் காவலர்கள் உள்ளனர். அவசர தேவை ஏற்பட்டால், இவர்கள் சந்நிதானத்துக்கு அனுப்பப்படுவார்கள்.

பம்பை மற்றும் சந்நிதானத்தில் உள்ள வியாபார ஸ்தலங்கள், ஓய்வறைகள், விருந்தினர் அறைகள், நன்கொடையாளர்கள் கட்டடம் ஆகியவற்றில் தேவையில்லாமல் யாரும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பம்பையிலும் சந்நிதானத்திலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலும், முகம் தெளிவாக பதிவாகும் வகையில் 12 கேமராக்கள் சந்நிதானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த முறை சபரிமலையில் பக்தர்களைத் தடுத்ததாகக் கைதானவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு காவலர்கள் கண்காணித்துவருகின்றனர். ஏற்கெனவே கைதானவர்களில் யாராவது வந்தால், அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருமுடி இல்லாமல் வருபவர்கள், தீவிரமாக சோதனைக்குப் பிறகுதான் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். சந்நிதானத்துக்கு வருபவர்கள், ஏதாவது  ஓர் அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் சபரிமலை தரிசனத்துக்கு வரக்கூடாது என்றும். சபரிமலைக்கு வருவதற்கு இதுவரை பெண்கள் யாரும் பாதுகாப்பு கேட்கவில்லை என்றும்  தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.