வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (05/11/2018)

கடைசி தொடர்பு:12:58 (05/11/2018)

பருவமழையால் ரேஷன் பொருள்கள் விநியோகம் பாதிக்குமா? - அமைச்சர் காமராஜ் விளக்கம்

வடகிழக்குப் பருவமழை காலங்களில் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் அதிக மழை, புயல் போன்றவைகளால் ரேஷன் பொருள்கள் விநியோகம் சீராக நடைபெறாத சூழல் நிலவியது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவந்தார்கள்.

அமைச்சர் காமராஜ்

தீபாவளியை முன்னிட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், நேற்று தமிழக உணவு அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக உணவுத்துறை அமைச்சர், ‘’தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்டவை அனுப்பப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால், வடகிழக்குப் பருவமழையால் பொது விநியோகத் திட்டத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது. திருவாரூர் மாவட்டத்தில் 721 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 495 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற்றுவருகிறார்கள். இந்தக் கடைகளுக்குத் தேவையான 6837 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 512 டன் சர்க்கரை, 150 டன் கோதுமை விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. மற்ற மாவட்டங்களுக்கும் இதேபோல சீரான முறையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்தார்.