வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (05/11/2018)

கடைசி தொடர்பு:12:27 (05/11/2018)

`20 தொகுதிகளுக்கு 7 ஃபார்முலாக்கள்!' - ஸ்டாலின், தினகரனுக்கு எதிராக எடப்பாடி வியூகம்

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள சமூக அமைப்புகள் மூலம் ஆளும்கட்சிக்கு வாக்குகளை சேகரிப்பது; எதிர்த்தரப்பில் யார் தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தினாலும் அவர்கள் மீது வழக்குப் போடுவது என முழுவீச்சில் களமிறங்கியுள்ளது அ.தி.மு.க.

`20 தொகுதிகளுக்கு 7 ஃபார்முலாக்கள்!' - ஸ்டாலின், தினகரனுக்கு எதிராக எடப்பாடி வியூகம்

மிழக அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் வகையில் நடக்கவிருக்கிறது 20 தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தல். `உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையின்படி, தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் 7 விதமான ஃபார்முலாக்களைப் பயன்படுத்த இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 120 தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில், ஆட்சியைத் தக்க வேண்டும் என்றால் 8 தொகுதிகளில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து தி.மு.க பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, `முதலில் தேர்தல் நடக்கிறதா என்று பாருங்கள். தேர்தல் வந்த பிறகு உட்கார்ந்து பேசுவோம்' எனப் பதில் கொடுத்தார். இந்நிலையில், 20 தொகுதிகளின் தேர்தல் பணிக்குழுவுக்குக் கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும். 

தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

``20 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை கவுரப் பிரச்னையாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்றத்தில் அ.தி.மு.கவுக்கு 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எனவே, 20 சட்டமன்றத் தொகுதிகளில் 8 அல்லது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டும்தான் பெரும்பான்மையைப் பெற முடியும். அதையொட்டித்தான் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார் முதல்வர். ஆனால், 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவருடைய இலக்கு" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 20 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து உளவுத்துறை மூலமாக விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அதையொட்டியே, தேர்தல் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றனர். தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் 4 தொகுதிகளில் தினகரனும் 4 தொகுதிகளிலும் தி.மு.கவும் ஆளும்கட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம். மற்ற தொகுதிகளில் அ.தி.மு.கவுக்குப் போட்டியாக யாரும் இல்லை. அதிலும், வடக்கில் வன்னிய சமூக வாக்குகளைப் பெறுவதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்

`படையாட்சியை கவுரவித்தது, மணிமண்டபம் குறித்த அறிவிப்பு ஆகியவற்றின் மூலம் வன்னிய சமூகத்தில் உள்ள 60 சதவிகித வாக்குகளை நம் பக்கம் கொண்டு வந்துவிட முடியும்' எனவும் அவர் நம்புகிறார். தேர்தலில் வெற்றி கிடைத்தால், `வன்னியரால்தான் வெற்றி பெற்றோம்' என அந்தச் சமூகத்துக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர். கொங்கு மண்டலத்தில் 10 சதவிகித நாடார் சமூக வாக்குகள் இருக்கின்றன. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் போன்ற தொகுதிகளில் இந்தச் சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்கத் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள சமூக அமைப்புகள் மூலம் ஆளும்கட்சிக்கு வாக்குகளைச் சேகரிப்பது; எதிர்த்தரப்பில் யார் தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தினாலும் அவர்கள் மீது வழக்குப் போடுவது என முழுவீச்சில் களமிறங்கியுள்ளது அ.தி.மு.க. அதன் ஒருகட்டமாகத்தான் பசும்பொன்னில் அ.ம.மு.க நிர்வாகிகள் மீது வழக்கு போடப்பட்டது. அரசை எதிர்த்து தினகரன் போராடட்டும் எனக் காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன்மூலம் அவரைக் கைது செய்யும் முடிவில் இருக்கிறார். 20 சட்டமன்றத் தொகுதிகளிலும் சாதிரீதியான செல்வாக்கைத் திரட்டுவதுதான் முக்கிய நோக்கம். வன்னியர் ஃபார்முலா, முத்தரையர் ஃபார்முலா எனத் தொகுதிகளுக்கேற்ப அமைச்சர்களைக் களமிறக்கியிருக்கிறார்" என்றவர், 

``தி.மு.கவா.. அண்ணா தி.மு.கவா என இரண்டு தரப்புக்கான போட்டியாக மட்டுமே களச் சூழலை உருவாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. `தோற்றுப் போனால் அரசு போய்விடும். இந்த அரசு போக வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் தி.மு.கவுக்கு ஓட்டுப் போடட்டும். அம்மா உருவாக்கித் தந்த இந்த அரசு நீடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் அ.தி.மு.கவுக்கு ஓட்டுப் போடட்டும்' எனத் தொண்டர்களிடம் சென்டிமென்டாக வாக்கு கேட்கத் திட்டமிட்டுள்ளனர் முன்னணி நிர்வாகிகள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அ.தி.மு.க, அதிகாரம், பணம், சாதி என 7 விதங்களில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆர்.கே.நகர் நிலவரம் வேறு. 20 தொகுதிகளின் நிலவரம் வேறு என்பதிலும் முதல்வர் உறுதியாக இருக்கிறார். `நம்மை எதிர்த்து தி.மு.கவும் அ.ம.மு.கவும் நிற்பது கடினம்' என்ற சூழலை உருவாக்கக் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக.